
பெரும் புயலாக உருவெடுத்துள்ள மகா புயல், தற்போது மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதியில் வடமேற்காக மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வரும் 3-ம் தேதி அந்தமான் தீவுகளுக்கு அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் புவியரசன், தமிழகத்தில் 3 நாட்களுக்கு லேசாக மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.மத்திய மேற்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு இழந்து வருகிறது. இது மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து 1,440 கிலோ மீட்டர் தென் மேற்கிலும், ஓமன் நாட்டில் இருந்து 580 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ள இந்த புயல்
அரபிக்கடலின் தென்மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வரும் நவம்பர் 3-ம் தேதி அந்தமான் தீவுகளுக்கு அருகில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து வரும் 48 மணி நேரத்தில் வட மேற்காக நகர்ந்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள அதிதீவிர மகா புயலின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேஸான முதல் மிதமான மழையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி பகுதி தேவாலாவில் ஆறு சென்டி மீட்டர் மழையும், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் ஐந்து சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதிகபட்ச வெப்ப நிலையாக 32 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.