
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், நாளை(அக்.,29) முதல் தமிழகத்தில் மழை பலமாக இருக்கும் ‘ என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை, அக்., 16ல் துவங்கி, தென் மாநிலங்கள் மற்றும் மஹாராஷ்டிராவில் பரவலாக பெய்துவருகிறது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில், சென்ற வாரம் பரவலாக மழை பெய்தது. காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆந்திரா பக்கம் சென்று வலுவிழந்த நிலையில், அரபி கடலில் புதிய புயல் உருவாகியுள்ளது. ‘கியார்’ என்று பெயரிடப்பட்ட இந்த புயல், இன்னும் நான்கு நாட்களில், ஓமன் நாட்டை நோக்கி நகர்ந்து கரை கடக்கும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் சின்னத்தினால் , வங்க கடல் பகுதியில் தட்பவெப்ப நிலை மாறி, மூன்று நாட்களாக மழை குறைந்தது. தீபாவளிக்கு முதல் நாள் முதல் வெயில் அதிகரித்துள்ளது. நேற்றும்(அக்.,27) பெரும்பாலான மாவட்டங்களில், வெப்பமான வானிலை நிலவியது. இந்நிலையில், வங்க கடலில், தென் மேற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு: வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, இரண்டு நாட்களில், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இரண்டு நாட்களுக்கு, பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.