ராஜா ராணி தொடர் இந்த வாரத்துடன் நிறைவடைய இருக்கும் நிலையில் தற்போது இந்த நாடகத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் விரைவில் விரைப்பாக இருக்கிறது. இந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கடைசி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. பலரும் இந்த நாடகம் முடிந்து விட்டதை எண்ணி வருத்தத்தில் இருக்கின்றனர். ஐபிஎஸ் கனவுகளுடன் இருக்கும் சந்தியா என்கிற பெண் விதி வசத்தால் இனிப்பு கடை நடத்தி வரும் சரவணனை திருமணம் செய்து கொள்கிறார். தனது மனைவி ஐபிஎஸ் ஆகவேண்டும் என்னும் கனவில் இருப்பதை அறிந்து கொள்ளும் சரவணன் அவரின் ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்கிறார். ஆனால் சரவணனின் தாயார் சிவகாமியும் தம்பி மனைவி அர்ச்சனாவும் சந்தியாவின் ஆசை நிறைவேறக்கூடாது என்பதில் கவனத்துடன் இருந்து வந்தனர். ஆனால் பல தடைகளை மீறி தனது மனைவியை ஐபிஎஸ் ஆக மாற்றி இருக்கிறார் சரவணன். நன்றாக போய்க் கொண்டிருந்த இந்த தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

ஆரம்பத்தில் இந்த நாடகத்தில் சந்தியாவாக ஆலியா மானசா நடித்து வந்தார். அப்போது இந்த தொடருக்கு டிஆர்பி ரேட்டிங் அதிக அளவில் இருந்தது. ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரை பலரும் விரும்பி பார்த்து வந்தனர். பின்னர் ஆலியா கர்ப்பமாக இருந்த காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பின்னர் சந்தியாவாக ரியா விஸ்வநாதன் நடித்து வந்தார். அவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில், திடீரென அவரும் ஒரு நாள் சீரியலில் இருந்து விலகினார். சீரியல் குழு தன்னை மிகவும் துன்பப்படுத்துவதாகவும், தனக்கு தூங்க கூட நேரமில்லை என்றும் பகிரங்க குற்றச்சாட்டை கூறியிருந்தார். பின்னர் அவருக்கு பதிலாக ஆஷா கௌடா, சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அடுத்த அதிரடியாக சீரியலை இயக்கி வந்த பிரவீன் பென்னட்டும் விலகி இருந்தார். தொடர்ந்து சீரியல் சரிவை சந்தித்து வந்த நிலையில் தற்போது சீரியல் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த வாரத்துடன் சீரியல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 24-ஆம் தேதி முதல் மோதலும் காதலும் என்கிற புது நாடகம் ஒளிபரப்பாக இருக்கிறது. ஏற்கனவே பொன்னி, மகாநதி, சிறகடிக்க ஆசை, ஆஹா கல்யாணம் போன்ற பல தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் தொடர்ந்து மோதலும் காதலும் மற்றும் ராதிகா சரத்குமார் இயக்கி நடித்து வரும் கிழக்கு வாசல் போன்ற நாடகங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அடுத்தடுத்து என்ன நாடகங்கள் முடியப்போகிறது என்பது குறித்து தெரியவில்லை. ஈரமான ரோஜாவே முடியலாம் என்கிற ஒரு கருத்தும் நிலவி வருகிறது. இந்த நிலையில் ராஜா ராணி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் கடைசியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. நாடகம் முடியப்போவது எண்ணி ராஜா ராணி சீரியல் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர்.