பிரபல பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று இருந்தது ஆர்ஆர்ஆர் படம். பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களை இயக்கி இருந்தவர் ராஜமௌலி. இந்த இரண்டு படங்களும் ஆயிரம் கோடி வசூலை அள்ளிக் குவித்தன. இந்த படத்தில் ஜீனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட், அஜய் தேவ்கன், சமுத்திர கனி போன்ற பலர் நடித்து இருந்தனர். கொமரம் பீமா, அல்லூரி சீதா ராமா ராஜூ என்ற சுதந்திர போராட்ட வீரர்களாக ஜூனியர் என்டிஆரும், ராம் சரணும் நடித்து இருந்தார்கள். திரைக்கதை, தயாரிப்பு, கலை, வடிவம், கிராபிக்ஸ் காட்சிகள் என பார்க்கும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது படக்குழு. குறிப்பாக சொல்ல வேண்டுமானல் புலிவேட்டைக் காட்சி மற்றும் பாலத்தில் ரயில் பற்றி எரியும் காட்சிகள் போன்றவை கிராபிக்ஸில் பின்னி எடுத்துள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். 1920 காலப்பகுதியில் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவை காட்டியுள்ளார் இயக்குனர்.

ஆனால் படத்தின் கதையில் சில சுணக்கங்களும் காணப்பட்டதாக பலர் கருத்து தெரிவித்தனர். பாகுபலி போல் RRR கற்பனை கதையில்லை. வரலாறு கதை. ஆனால் ராம்சரண் ஆங்கிலேயர்களை கடவுள் ராமர் போன்று வில் அம்பு கொண்டு வீழ்த்துவது போன்ற காட்சிகள் அறிவுக்கு எட்டாதவையாக இருந்தன. பாகுபலி போன்ற கற்பனை குதிரைகளை கட்டவிழ்த்து விடும் படங்கள் என்றால் இந்த பிரச்சினைகள் இல்லை. ஆனால் இந்திய சுதந்திர போராட்டத்தை மையக் கருவாக கொண்டு உருவாக்கப்படும் படங்களில் ஆயுதம் தாங்க ஆங்கிலேயர்களை வில் அம்பு கொண்டு வீழ்த்தும் கற்பனைகள் எல்லாம் கொஞ்சம் ஓவர் என்ற கமெண்டுகளும் வந்தன. தற்போது ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி ஆர்ஆர்ஆர் படத்தை ஓரின சேர்க்கையாளர் படம் என்று கூறியுள்ளார் இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ட்விட்டரில் ஒருவர் ஆர்ஆர்ஆர் என்ற குப்பை படத்தை 30 நிமிடங்கள் பார்த்தேன் என்று பதிவிட்டு இருந்தார். அதை பார்த்த ரசூல் பூக்குட்டி இந்த படம் ஓரின சேர்க்கையாளர் பற்றிய படம் என்று பதிலளித்தார். இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். பாகுபலி தயாரிப்பார் ஷோபு யார்லகடா தனது பதிவில், இந்த படம் ஓரின சேர்க்கையாளர் காதல் படம் என்று நான் நினைக்கவில்லை, அப்படி இருந்தாலும் “ஓரினச்சேர்க்கை காதல் கதை” ஒரு மோசமான விஷயமா? இதை எப்படி நீங்கள் நியாயப்படுத்த முடியும்? உங்களைப் போன்ற சாதனையாளர் ஒருவர் மிகவும் தாழ்ந்து போனதில் மிகுந்த ஏமாற்றம்! என்று பதிவிட்டு இருந்தார்.
அதற்கு பதிலளித்த ரசூல் பூக்குட்டி முழுவதுமாக ஒப்புக்கொள்கிறேன். அந்த படம் அவ்வாறு இருந்தாலும் தவறில்லை. பொது தளத்தில் ஏற்கனவே இருக்கும் கருத்தை தான் நான் மேற்கோள் காட்டினேன், வேறு எதுவும் இல்லை. இதில் வளைந்துகொடுக்கும் காரணி எதுவும் இல்லை.உங்களுக்கு அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் ஷோபு, நான் எந்த குற்றத்தையும் சொல்லவில்லை என்று படத்தின் தயாரிப்பாளருக்கு பதிலளித்துள்ளார்.