சமீபத்தில் கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் விரைவில் பிரபல செய்தி சேனல் ஒன்றை விலைக்கு வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த சில நாட்களாக இந்த தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய், தற்போது தனது கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறார். சினிமாவில் உச்சபட்ச நடிகராக கோடிகளில் சம்பளம் வாங்கும் விஜய் தற்போது சினிமாவை துறந்து விட்டு, மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் ஈடுபட இருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ பணிகளும் தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்றைய தினம் பனையூரில் உள்ள தனது வீட்டில் செயற்குழு கூட்டத்தையும் நடத்தி முடித்திருக்கிறார். வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக தனது கட்சி நிர்வாகிகளுக்கு பல அறிவுரைகளை கூறியிருக்கிறார் விஜய். “கடைக் கோடியில் இருக்கும் மக்களுக்கும் கட்சியை கொண்டு செலுத்த வேண்டும்” அந்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு நிர்வாகிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். இப்படி கட்சிப் பணிகளில் வேகம் எடுத்து இருக்கும் விஜய், ஒரு தொலைக்காட்சியையும் துவங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு உரிமம் உள்ளிட்ட பல வேலைகள் இருப்பதாலும், நடைமுறை சிக்கல்கள் பல இருப்பதாலும் அந்த திட்டத்தை விஜய் கைவிட்டு விட்டதாக தெரிகிறது.
எனவே ஏற்கனவே செயல்பட்டு வரும் ஒரு தொலைக்காட்சியை விலைக்கு வாங்க விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்காக கேப்டன் டிவியுடன் விஜய் பேசி இருப்பதாகவும் தகவல் கசிந்து இருக்கிறது. இந்த சேனலை விலைக்கு வாங்கிய பின்னர் “தளபதி டிவி” என்று பெயர் மாற்றம் நடந்து, விஜயின் அரசியல் கட்சி குறித்த செய்திகள், பொதுக் கூட்டங்கள் மற்றும் கட்சி சார்ந்த விஷயங்கள் ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது. விஜய்க்கு “விஜய் டிவி” என்று டிவி ஆரம்பிக்க தான் விருப்பம் என்று கூறப்பட்டாலும், ஏற்கனவே அந்த பெயரில் தொலைக்காட்சி இருப்பதால் “தளபதி டிவி” என்று தொடங்க இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.