கடந்த சில தினங்களாக ‘பருத்திவீரன்’ பட சர்ச்சை சமூக வலைத்தளங்களில் மிக வைரலாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஞானவேல் ராஜா தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டு விட்டார். ஆனால் அதற்கு மீண்டும் பதில் அளிக்கும் விதமாக இயக்குனர் சமுத்திரக்கனி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ‘பருத்திவீரன்’ படத்தில் இயக்குனர் அமீர் பொய் கணக்கு எழுதி பல லட்ச ரூபாயை திருடி விட்டதாக ஸ்டியோ க்ரீன் தயாரிப்பு நிறுவன அதிபர் ஞானவேல் ராஜா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அவரின் அந்த பேட்டி இணையத்தில் வைரலானது. 17 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் இப்படி சர்ச்சையாக பேசியது குறித்து இயக்குனர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

17 ஆண்டுகளாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் ஞானவேல் ராஜாவின் கருத்து எதிராக இயக்குனர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, சுதா கொங்காரா போன்றோர் எதிர்வினை ஆற்றினர். தொடர்ந்து ஞானவேல் ராஜா நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு மன்னிப்பு கோரியிருந்தார். அதில், “17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் இந்த பிரச்சனை குறித்து தான் பேசியதே இல்லை. இதுவரை ‘அமீர் அண்ணா’ என்று தான் குறிப்பிட்டு வருகிறேன். ஆரம்பத்தில் இருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கி பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக நான் பேசிய வார்த்தைகள் அவரை மனதை புண்படுத்தி இருந்தால் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆனால் அவரின் இந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்ளாத சமுத்திரக்கனி, பதிலுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், “பிரதர் இந்த வருத்தம் தெரிவிக்கிற சீன் எல்லாம் இங்கு செல்லாது. நீங்க செய்ய வேண்டியது, எந்த பொதுவெளியில் எகத்தாளமா உக்காந்துகிட்டு அருவருப்பான உடல் மொழியில் சேற்றை வாரி இறைச்சீங்களோ, அதே பொதுவெளியில பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும். நீங்க கொடுத்த அந்த கேவலமான தரங்கெட்ட நேர்காணலை சமூக வலைத்தளங்களில் இருந்து துடைச்சு எரியனும். அன்னைக்கு கொடுக்காமல் ஏமாத்திட்டு போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா கடனா வாங்கின நிறைய பேருக்கு திருப்பி கொடுக்க வேண்டியது இருக்கு.
அப்புறம் ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் வேலை பார்த்த நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம் அவங்க எல்லாம் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து வேலை பார்த்தவங்க. நீங்கதான் அம்பானி ஃபேமிலி ஆச்சே..! காலம் கடந்த நீதி, மறுக்கப்பட்ட நீதி” என்று சொல்லி அவர் அந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அவரின் இந்த பதிவு மறைமுகமாக நடிகர் கார்த்திக் மற்றும் சூர்யா குடும்பத்தையும் தாக்கும் விதமாக அமைந்திருப்பதாக சிலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அமீர் ஆதரவாளர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.