நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா தனது கணவர் இறந்து ஒரு மாதம் ஆன நிலையில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். நாதஸ்வரம், கல்யாணப்பரிசு, வாணி ராணி, பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. இவருக்கும் உடற்பயிற்சி ஆர்வலரான அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் ஆகஸ்ட் இரண்டாம் தேதி யாரும் எதிர்பாராத விதமாக கார்டியாக அரெஸ்ட் ஏற்பட்டு அரவிந்த் சேகர் உயிரிழந்தார். 30 வயதிலேயே அவர் மரணம் அடைந்திருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதுகுறித்து பதிவிட்டு இருந்த சுருதி, தன் கணவர் மாரடைப்பு ஏற்பட்டு தான் இருந்தார். ஆனால் சமூக வலைத்தளங்களில் தவறாக எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் இறந்து ஒரு மாதம் முடிந்த நிலையில் ஸ்ருதி சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில், “ஒரு மாதமாக உங்களுடைய உடல் என் அருகில் இல்லை, ஆனால் உங்களுடைய ஆன்மா என் மீது அன்பைப் பொழிந்து கொண்டிருக்கிறது. நான் எப்பொழுதெல்லாம் உடைந்து போகிறேனோ அப்பொழுதெல்லாம் உங்கள் ஆன்மா என் அருகில் இருந்து என்னை பாதுகாக்கிறது. நீங்கள் ஏஞ்சல் போல என் அருகில் இருப்பதையும் உணர்கிறேன்.
எனது இறுதி மூச்சு உள்ளவரை உங்களுடைய அழகான நினைவுகளை சுமந்து கொண்டிருப்பேன். எனக்காக போன் செய்தும், மெசேஜ் அனுப்பியும் ஆறுதல் சொன்ன அனைவருக்கும் நன்றி. எனக்காக இவ்வளவு பேர் இருப்பீர்கள் என்பதை நானும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இது போன்ற நல்ல உள்ளங்கள் என்னை சுற்றி இருப்பதை நினைத்து நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். உங்களுடைய பிரார்த்தனைகளுக்கு நன்றி. இது போன்ற தூய உள்ளங்கள் கொண்ட நண்பர்கள் என்னை சுற்றி இல்லாமல் இருந்திருந்தால் இந்த கடினமான கட்டத்தை நான் கற்பனை செய்து கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. எனக்காக எப்படி நின்றீர்களோ அதுபோல உங்களுக்காக நான் கண்டிப்பாக நிற்பேன். மிக்க நன்றி, அரவிந்த் ஸ்ருதி” என்று பதிவிட்டு இருக்கிறார்.!