நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது விக்ரம் படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள கமலின் படம் விக்ரம் என்பதால் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. மேலும் மாநகரம், கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்த ஹிட்களை கொடுத்த லோகேஷ் இயக்கத்தில் படம் உருவானதும் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்தது.

இந்நிலையில் தற்போது அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துள்ளது. கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களும் மிரட்டியுள்ளனர். ரோலெக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ள நிலையில், அந்த கேரக்டரும் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்துள்ளது.
தன்னுடைய 100 சதவிகித படமாக விக்ரம் படத்தை இயக்கியுள்ளதாக முன்னதாக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். முன்னதாக அவர் இயக்கத்தில் வெளியான விஜய்யின் மாஸ்டர் படத்தில் சில சமரசங்களை செய்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் படத்தின் திரைக்கதை மிரட்டலாக அமைந்துள்ளது.
ஒரு சில குறைகளை விமர்சகர்கள் கூறினாலும் படம் ஒட்டுமொத்தமாக அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் படம் பெரிய அளவில் வெற்றி பெற படக்குழுவினருக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டவர்களை குறிப்பிட்டு அவர் வாழ்த்தியுள்ளார்.
மேலும் 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் அவருக்கு மிகச்சிறப்பான படமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முக்கியமான படங்கள் வெளியாகும்போது அந்தப் படங்களுக்கு வாழ்த்துக்களை கூறும் பழக்கத்தை சிவகார்த்திகேயன் தொடர்ந்து செய்து வருவது பாராட்டுக்குரியது.
கமல் தயாரிக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனை நாயகனாக நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. ரங்கூன் இயக்குனர் இயக்கம் இந்த படத்தில், சாய் பல்லவி நாயகியாக நடிக்க உள்ளார். இது கமலின் “ராஜ் கமல் பிலிம்ஸ்” சார்பில் தயாரிக்கப்படும் 51வது படமாகும்.