இயக்குனர் சுதா கொங்காராவுக்கு ஷூட்டிங் போது விபத்து ஏற்பட்டு கை முறிந்துள்ளது. அந்த செய்தியை அவரே தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அவர் விரைந்து குணமாக வேண்டி அவரது ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் பெண் இயக்குனர்கள் மிக குறைவு. அதில் குறிப்பிட்டு நல்ல தரமான படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் சுதா கொங்கரா.! ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்த இவர், அங்கேயே தன் பள்ளிப்படிப்பை முடித்தவர். தனது கல்லூரி படிப்பை நாகர்கோயிலில் உள்ள மகளிர் கிருத்துவக் கல்லூரியில் பயின்றவர். திரைக்கதை ஆசிரியராகவும், இயக்குனராகவும் தமிழ் திரையுலகிலும், தெலுங்கு திரைத்துறையிலும், இந்தித் திரைப்பட உலகிலும் நன்கு அறியப்பட்டவராக வலம் வருகிறார் சுதா கொங்காரா.

இவர் எழுதிய திரைக்கதை இந்திய ஆங்கிலப் படமான மித்ர், மை ஃபிரண்ட் அந்த ஆண்டின் சிறந்த ஆங்கிலப் படத்திற்கான விருதாக 49ஆவது தேசியத் திரைப்பட விருதைப் பெற்றது. இவர் துணை இயக்குநராக ஏழு ஆண்டுகள் மணிரத்தினத்திடம் பணியாற்றியவர். 2016 ஆம் ஆண்டில் இவர் இந்தி திரையுலகில் சாலா காதூர்ஸ் திரைப்படத்தின் வழியாக நுழைந்தார். இவர் முதன் முதலில் இயக்கிய தமிழ்த் திரைப்படம் துரோகி (2010) ஆகும். இதன் பிறகு இவர் குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட திரைப்படத்திற்கான கதையை 2013 ஆண்டில் எழுதி, நடிகர் மாதவனிடம் கதையைச் சொன்னார். இக்கதையால் கவரப்பட்ட மாதவன் இந்தத் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் படத் தயாரிப்புக்கும் உதவி செய்து படத்தை உயர்ந்த இடத்துக்குக் கொண்டு செல்ல உதவினார். இந்தப் படம்தான் இறுதிச்சுற்று.இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
பின்னர் இவர் 2020ம் ஆண்டு சூரரை போற்று திரைப்படத்தை இயக்கினார். ஏழைகளும் விமானத்தில் பயணிக்க முடியும் என்று நல்ல கருத்தை சொன்னதால் படம் தேசிய விருதுகளை வாங்கி குவித்தது. பின்னர் ஆந்தாலஜி முறையில் எடுக்கப்பட்ட பாவக்கதைகள் என்னும் படத்தில் திருநங்கைகளின் காதல் மற்றும் சாதிய முறைகளுக்கு எதிரான தங்கம் என்னும் கதையை எடுத்தார். இதன் பின்னர் இவர் மக்களால் அதிகம் விரும்பும் இயக்குநராகி போனார். தற்போது சூரரை போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் ஷூட்டிங் போது சுதா கொங்கராவுக்கு விபத்து நடந்துள்ளது. இதனால் அவர் கை எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களை பகிர்ந்த அவர் இது மிகவும் வலிக்கிறது, எரிச்சலாக உள்ளது, இதை போன்ற பிரேக் எனக்கு வேண்டாம், ஒரு மாதம் இப்படி தான் இருக்க வேண்டும் என்று பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு கீழே ஜிவி பிரகாஷ் விரைந்து குணமாகி வாருங்கள் சகோதரி என்று பதிவிட்டு இருக்கிறார்.