இரண்டு நாட்களாக ஒட்டுமொத்த தமிழகத்தையும் அழ வைத்த ஒரு நிகழ்வு என்று சொன்னால் அது கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு தான். ஏழு கோடி தமிழக மக்களின் நெஞ்சங்களையும் கரைத்து விட்டு சென்று இருக்கிறார் கேப்டன். சினிமாவில் சாதிப்பதற்கு நிறமோ அழகோ தேவை இல்லை. திறமை இருந்தால் போதும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சாதித்து காட்டியவர் விஜயகாந்த். மதுரையில் பிறந்து வளர்ந்த இவர், நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்து படங்களில் நடிக்கத் தொடங்கினார். அந்த காலத்திலேயே ரசிகர் மன்றம் வைத்து பலருக்கும் உதவி செய்து புகழ்பெற்றவர் விஜயகாந்த். பின்னர் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற நோக்கில் இவர் அரசியலுக்குள் நுழைந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டு தேமுதிக என்கிற கட்சியை ஆரம்பித்த அவர் 2011ம் ஆண்டு தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார். ஆனால் அப்போது அவருக்கு சில எம்எல்ஏக்கள் செய்த துரோகத்தின் காரணமாக மனமுடைந்த அவர், தொடர்ந்து வீட்டிலேயே முடங்கினார். அவரது உடல் நலமும் குன்றி போனது. அமெரிக்காவில் சென்று சிகிச்சை பெற்று வந்தார் விஜயகாந்த் பின்னால் ஒரு கட்டத்தில் அவரால் பேசவும் நடக்கவும் முடியவில்லை. சர்க்கர நாற்காலியில் வரத் தொடங்கினார். கட்சியின் பொதுக்கூட்டங்கள், முக்கியமான நிகழ்வுகளில் மட்டுமே விஜயகாந்தை அழைத்து வந்தனர். ஆனால் அப்போதும் முகத்தில் மாஸ்க் அணிந்தபடியும், கண்ணாடி அணிந்து கொண்டும் இருந்ததால் அவரின் பழைய கம்பீரமான முகத்தை பார்க்க முடியாமல் தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுது வந்தனர்.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மிகவும் உடல் நலம் குன்றிய நிலையில், மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்றும், நுரையீரல் செயலிழப்பும் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் சிகிச்சை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே விஜயகாந்த் காலமானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு நேற்றும் இன்றும் சுமார் 15 லட்சம் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு அரசும் அரசு மரியாதையோடு அவருக்கு இறுதி சடங்குகளை செய்தனர். இந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரைப் பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர்.
அதில் இன்று காலை ரஜினிகாந்த் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தார். அவர் அஞ்சலி செலுத்தி விட்டு பேசிவிட்டு திரும்பும் பொழுது காரில் அமர்ந்து உடைந்து அழும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் பார்க்காத அந்த வீடியோவை ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர். மீசை ராஜேந்திரனின் கையைப் பிடித்துக் கொண்டு ரஜினிகாந்த் அழும் வீடியோ பலரையும் கலங்க வைத்திருக்கிறது. தலைவர் இப்படி உடைந்து போய் அழுது யாருமே பார்த்ததில்லையே என்று சொல்லி பலரும் அந்த வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.!