தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று, சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில், ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்திருந்து இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற தமிழணங்கு ஓவியத்தை பகிர்ந்து, “எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே” என பதிவிட்டிருந்தார்.
முதல்வரின் ட்வீர் வைரலாகிட, தமிழ்த்தாய் ஓவியத்தில் தலைவிரிக்கோலத்துடன் தமிழன்னை இருப்பதாகவும், அதுமட்டுமல்லாமல் கறுப்பு நிறத்துடன் இருப்பதாகவும் பாஜகவினர் விமர்சிக்க தொடங்கினர். அதற்கு சிலர், தமிழ் கறுப்புதான், தமிழர் கறுப்பு தான், தமிழன்னையும் கறுப்புதான் என பதில் தெரிவித்து வந்தனர்.

இதனை பா.ஜ.க மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களும் பதிவிட அதில் தமிழ் அன்னையின் படத்தை மற்றி வேறு ஒரு தமிழ் அன்னையின் படத்தை பதிவிட்டுருந்தார். அதில் ஒரு ஓரத்தில் “ஸ” என்கிற வார்த்தையை சேர்த்து பதிவிட்டு இருந்தார்.
இதனை சுட்டிக்காட்டி தமிழக தொழிற்துறை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு “தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார்” என பதிவிட்டு தமிழக பா.ஜ.கவினரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.