பின்னணி பாடகியும் இளையராஜாவின் மகளுமான பவதாரணி மறைவு ரசிகர்கள் பலரையும் கலங்கடிக்க வைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அவரின் இந்த பதிவிற்கு பலரும் ஆறுதல்களை கூறி வருகின்றனர். இளம் வயது முதலே பவதாரணியும், வனிதாவும் நெருங்கிய தோழிகளாக இருந்த நிலையில் பவதாரணியின் மறைவு வனிதாவை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பது அவரது பதிவில் இருந்தே தெரிகிறது. 1976ம் ஆண்டு இசையமைப்பாளர் இளையராஜா ஜீவா தம்பதிகளின் இரண்டாவது மகளாக பிறந்தவர் பவதாரணி.

சிறு வயது முதலே இசை மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக தனது தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் படங்களில் பாடத் தொடங்கினார். சிறு குழந்தையாக பாடிக்கொண்டிருந்த அவர் 1995ம் ஆண்டு ‘ராசையா’ என்கிற பாடலை பாடியதன் மூலமாக பின்னணி பாடகியாக அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் பாடியிருக்கும் அவர், ‘என்னை தாலாட்ட வருவாளா’, ‘ஒளியிலே தெரிவது தேவதையா’, ‘மயில் போல பொண்ணு ஒன்னு’, ‘தாலியே தேவையில்லை’, ‘ஏழேழு தலைமுறைக்கும்’ போன்ற பல நல்ல பாடல்களை தமிழ் திரை உலகத்திற்கு பாடியிருக்கிறார். கடைசியாக 2022ம் ஆண்டு வெளியான ‘மாமனிதன்: படத்தில் ‘பண்ணைபுரத்து’ என்கிற பாடலை அவர் பாடி இருந்தார்.
இந்த நிலையில் புற்றுநோய் காரணமாக சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது திரையுலகினர் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், நடிகை வனிதாவிற்கும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கும் வனிதா, “நீ என்னுடைய தோழி கிடையாது, என்னுடைய சகோதரியும் கிடையாது, உனக்குத் தெரியும் நீ எனக்கு எப்படிப்பட்டவர் என்று.
உன்னுடைய தாயார் ஜீவாவிற்கு நான் என்னுடைய அன்பை கொடுத்தேன் என்று சொல்லு, நான் அவரை எப்பொழுதும் தவற விட்டு தவிக்கிறேன். நீ எப்பொழுதும் கடவுளின் குழந்தை. நான் உடைந்து நொறுங்கிப் போய் இருக்கிறேன். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்னுடைய முதல் பாட்டை நீ தான் பாடினாய். சிறு வயது முதல் நாம் சேகரித்த நினைவுகள் உன்னை நான் மீண்டும் சந்திக்கும் வரை என்னை தாக்கிக் கொண்டே இருக்கும். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை” என கண்ணீருடன் பதிவிட்டு இருக்கிறார்.