இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘லவ் டுடே’ பட கதாநாயகனை வைத்து புதிதாக இயக்க இருக்கும் திரைப்படம் தான் எல்.ஐ.சி. தற்போது இந்த திரைப்படத்தின் டைட்டில் குறித்த சர்ச்சை ஒன்று எழுந்திருக்கிறது. தமிழ் திரை உலகப் பொருத்தவரை படத்திற்கு வைக்கப்படும் தலைப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு படத்தின் அடையாளமாக படத்தின் தலைப்பு தான் விளங்கி வருகிறது. ஆண்டுகள் பல ஓடிய பின்பும் படத்தின் டைட்டிலை வைத்து தான் ரசிகர்கள் அந்த படத்தை நினைவு கூறுவார்கள். அதற்காக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படத்தின் டைட்டிலை மிகவும் கவனமாக தேர்ந்தெடுப்பது வழக்கம். தற்போதெல்லாம் டைட்டிலை ஒரு டீசருடன் அறிவிக்கும் வழக்கமே உருவாகி இருக்கிறது.

ஆனாலும் தமிழ் திரையுலகை சுற்றி டைட்டில் பிரச்சனைகள் எப்போதும் ஓய்ந்த பாடில்லை. தற்போது விக்னேஷ் சிவன் ‘லவ் டுடே’ கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு புதிய படத்தை துவங்கியிருக்கிறார். இந்த படத்தை ‘லியோ’ படத்தை தயாரித்த லலித் குமார் தயாரிக்க இருக்கிறார் எஸ்.ஜே சூர்யா, யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி, இசையமைப்பாளர் அனிருத் என பலர் பணியாற்றும் இந்த படத்தின் படபூஜை நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. நயன்தாரா இல்லாமல் முதல் முறையாக தனது படத்தின் பூஜையை துவக்கி இருந்தார் விக்னேஷ் சிவன். இந்த படத்தின் தலைப்பு குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. இந்த படத்திற்கு எல்.ஐ.சி என்று பெயரிட்டு இருந்தார் விக்னேஷ் சிவன்.அதற்கு விரிவாக்கமாக லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்று விளக்கமும் அளித்திருந்தார்.
இந்த நிலையில் இந்தப் படத்தின் தலைப்பு தன்னுடையது என்று இயக்குனர் ஒருவர் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார். இயக்குனர் எஸ்.எஸ் குமரன் என்பவர் ஏற்கனவே எல்.ஐ.சி என்கிற டைட்டிலை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்திருப்பதாகவும், குமரனை விக்னேஷ் சிவன் அணுகி தனக்கு டைட்டில் வேண்டும் என கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் பூஜை அன்று டைட்டிலை தனது அனுமதி இல்லாமலே டைட்டிலை விக்னேஷ் சிவன் அறிவித்து விட்டார் என்று சொல்லி குமரன் தாயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
எல்.ஐ.சி டைட்டிலை விக்னேஷ் சிவன் பயன்படுத்தக் கூடாது, மீறினால் அவர் மீது வழக்கு தொடுக்க இருப்பதாக இயக்குனர் குமரன் அறிவித்திருக்கிறார். புது படம் தொடங்கிய ஒரே நாளிலேயே பஞ்சாயத்து கிளம்பி இருப்பது விக்னேஷ் சிவன் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.