சமூக வலைதளங்களில் சில நாட்களாக ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் மோதலில் ஈடுபட்ட வந்த நிலையில் தற்போது அந்த மோதல் ட்விட்டரில் யுத்தமாக மாறி இருக்கிறது. மதுரையில் போஸ்டர் யுத்தத்தை விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் தொடங்கி இருக்கின்றனர்.

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்து தனது அயராத உழைப்பால் இன்று தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டாராக மாறி இருப்பவர் ரஜினிகாந்த். சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பலரின் மனம் கவர்ந்த நாயகனாக திரைத்துறையை சுமார் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற சர்ச்சை சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் எழுந்து இருக்கிறது. வாரிசு பட இசை வெளியீட்டு விழாவின் போது சரத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று பேசியிருந்தார் அப்போதிலிருந்து இந்த சர்ச்சை தொடங்கியது.
சூப்பர் ஸ்டார் உயிருடன் இருக்கும் பொழுதே அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு விஜய் ஆசைப்படுவதாக கூறி ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களிடையே கடுமையான சண்டை எழுந்து வந்தது. அப்போதே இருவரும் சமூக வலைத்தளங்களில் கடுமையான மோதல்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஜெயிலர் விழாவில் பேசியிருந்த சூப்பர் ஸ்டார் பருந்து மற்றும் காகம் கதைகளை கூறியிருந்தார். இது விஜயை மறைமுகமாக குறிப்பிட்டு தான் ரஜினி பேசி இருப்பதாக பலரும் பேசத் தொடங்கினர்.
குறிப்பாக சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தான் ஆசைப்படவில்லை என்று சொல்லி மறைமுகமாக விஜயை விமர்சித்து இருந்ததாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர்.
கழுகு எப்பொழுதும் அமைதியாக இருக்கும். கழுகு பறப்பதை பார்த்து காகம் உயரமாக பறக்க நினைக்கும். ஆனால் காகத்தால் அது முடியாது. கழுகு இறக்கையை கூட ஆட்டாமல் உயரத்தில் பறந்து கொண்டே இருக்கும் என்று பேசியிருந்தார்.
இது விஜயை குறிப்பிட்டு தான் ரஜினி இவ்வாறு பேசியிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
அன்று தொடங்கி இன்று வரை சூப்பர் ஸ்டார் மற்றும் விஜய் ரசிகர்களிடையே சண்டை எழுந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மதுரையில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில், “என்னுடைய உச்சம், உனக்கு ஏன் அச்சம்” என்று சொல்லி விஜய் ரஜினியைப் பார்த்தது கை நீட்டி கேட்பது போல போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.
தற்போது இந்த போஸ்டரை ரஜினி ரசிகர்கள் கிழித்து எறிந்ததுடன் சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். விஜயை காகம் என்றும், விஜய் ரசிகர்களை காக்கா கூட்டம் என்றும் ரஜினி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும் இரவு நேரம் யாருக்கும் தெரியாமல், போஸ்டர் ஒட்டியவன் முகத்தை கூட போடாமல் இப்படி போஸ்டர் ஒட்டி இருப்பதாக கடுமையாக விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சில நாட்களாக இந்த பிரச்சனை உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் நிலையில் ரஜினியும் விஜயும் எந்தவித கருத்தையும் சொல்லாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.!