இயக்குனர் வம்சி இயக்கியிருக்கும் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது இந்த விழாவில் நடிகர் விஜய் பேசி இருக்கும் வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது வரை சுமார் 65 படங்களுக்கு மேல் நடித்து முடித்து இருக்கிறார். இந்த நிலையில் அவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரித்திருக்கிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் அஜித் மோதும் படமாக அமைந்துள்ளது. அஜித்தின் துணிவு படத்துடன் பொங்கலுக்கு இந்த படம் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இதில் பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். வாரிசு திரைப்படம் எமோஷனல் நிறைந்த ஒரு குடும்ப படம் என்று கூறப்படுகிறது. இதுவரை வாரிசு படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். விஜய் படத்திற்கு தமன் முதல் முறையாக இசையமைக்கும் படம் இதுவாகும். இந்த படத்தின் மூன்று பாடல்களுமே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. சுமார் 60 மில்லியன்களுக்கு மேல் பார்வையாளர்களை பெற்று ரஞ்சிதமே பாடல் சாதனை புரிந்துள்ளது. அடுத்தபடியாக வெளியான தீ தளபதி பாடலும், மூன்றாவதாக வெளியான சோல் ஆஃப் வாரிசு என்கிற பாடலும் மக்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த இசை வெளியீட்டு விழாவை அவரது ரசிகர்கள் பெரும்பாலும் எதிர்பார்த்து காத்திருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதற்கு முக்கிய காரணம் தன்னை சுற்றி நடக்கும் அரசியல் விஷயங்கள் அனைத்திற்கும் ஒரு குட்டி ஸ்டோரி மூலமாக பதிலளிக்கும் மேடையாக அவரது இசை வெளியீட்டு விழாக்களை பயன்படுத்திக் கொள்கிறார் விஜய். சர்க்கார் படத்தின் போது இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தனது அரசியல் ஆசைகளையும் அவர் வெளிப்படுத்தினார். முதலமைச்சராக சர்க்கார் படத்தில் நடித்துள்ளீர்களா என்ற கேள்விக்கு முதலமைச்சரானால் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்று சொல்லி முதலமைச்சர் ஆசையை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் பிரச்சாரம் செய்து தான் சர்க்காரை அமைப்பார்கள், ஆனால் நாங்கள் சர்க்காரை அமைத்துவிட்டு பிரச்சாரம் செய்கிறோம் என்று பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் நடிகர் விஜய்.
தற்போது வாரிசு படத்தில் இசை வெளியீட்டு விழாவிலும் அவர் பல கருத்துக்களை கூறியிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் குட்டி ஸ்டோரி சொல்வாரா விஜய் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது விஜய் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.மேடையில் ஏறியவுடன் ரசிகர்களை பார்த்து கையசைத்து ரஞ்சிதமே பாடல் ஸ்டைலில் முத்தம் கொடுத்தபடி தனது பேச்சை ஆரம்பித்தார் நடிகர் விஜய். முதலில் வம்சி பற்றி பேசிய அவர் வம்சி சொன்ன கதையை ஒரு தடவை கேட்ட உடனேயே யாராக இருந்தாலும் ஓகே சொல்லிடுவாங்க. நம்முடைய நண்பா நண்பிகள் எல்லாருமே என்னுடைய குடும்பம் மாதிரி தான். அவங்களுக்காகத் தான் இந்த படம். பாடலாசிரியர் விவேக்குக்கு உள்ளே ஒரு இயக்குனர் இருக்கிறார். அதை நீங்கள் இனிமேல் பார்க்கப் போகிறீர்கள். தமன் புல்லாங்குழலை வைத்து கூட ட்ரம்ஸ் வாசிப்பார். அதுபோலத்தான் வாரிசு பாடல்களுக்கு பீட் போட்டு வைத்திருக்கிறார். வில்லன்னு சொன்னா பல பேர் ஞாபகத்துக்கு வருவார்கள். ஆனால் கில்லி படத்தில் வர முத்துப்பாண்டி தான் பலருக்கும் ஞாபகத்துக்கு வருவார்கள். கில்லி, சிவகாசி படங்களுக்குப் பிறகு தொடர்ந்து இந்த படத்திலும் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடிக்கிறார் என்று விஜய் பேசினார்.
மேலும் குஷ்பு பற்றி பேசிய அவர் குஷ்புவை பார்த்தால் தனது கேர்ள் பிரண்டுடன் சென்று கமலா தியேட்டரில் சின்னதம்பி படத்தை பார்த்த ஞாபகம் வருகிறது. ரத்தத்துக்கு தான், ஏழை, பணக்காரன், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி ரொம்ப முக்கியமா எந்த மதம் இதெல்லாம் தெரியாது. ரத்தத்துக்கு எந்த பிரிவினையும் தெரியாது. மனுசங்க மட்டும்தான் பிரிவினையை பார்க்கிறோம். ரத்தத்துக்கிட்ட இருந்து நாம அந்த கத்துக்கணும். அதனாலதான் என்னுடைய ரசிகர்களை ரத்த தானம் செய்ய ஊக்குவிக்கிறேன். வாய்ப்பு கிடைக்கிறப்ப எல்லாம் நன்றி சொல்லிக்கிட்டே இருக்கணும். என்ன உருவாக்கின உளிகளான ரசிகர்களுக்கு நன்றி. பிரச்சனைகள் வரத்தான் செய்யும். நம்மள ஒருத்தவங்க எதிர்க்குறாங்கன்னா, நம்ம கரெக்டா போயிட்டு இருக்கோம்னு அர்த்தம். தேவையான விமர்சனமும், தேவையில்லாத எதிர்ப்பும் நம்மள ஓட வச்சுகிட்டே இருக்கும்.
வாழ்க்கையில முன்னேறனும்னா உங்களுக்கு ஒரு போட்டியாளர் இருக்கணும் ஆனா அந்த போட்டியாளர் நீங்களா தான் இருக்கணும். 1990ல் ஒரு நடிகர் எனக்கு போட்டியாக வந்தார்,பின்னாளில் அவர் என்னுடன் சீரியசான போட்டியாளராக மாறினார்,அந்த நடிகரின் வெற்றியால் தொடர்ந்து நானும் கஷ்டப்பட்டு ஓடினேன்,அந்த நடிகரை விட அதிக வெற்றியை பெற வேண்டும் போராடினேன்,நமக்கு அது மாதிரி போட்டியாளர் தான் வேண்டும்,அவர் பெயர் தான் ஜோசப் விஜய் என தனக்கு தன்னையே போட்டியாளராக எடுத்து கொண்டு தன்னை உருவாக்கியுள்ளார் விஜய்.என்னை உருவாக்கிய என் புள்ளைங்களுக்கு என் நன்றிகள் என் முத்தங்கள் ,வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நன்றியை காட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என கூறியுள்ளளார்.
பின்னர் விஜய் தனக்கே உரித்தான குட்டி ஸ்டோரியை கூறியுள்ளார். அதில் ஒரு குடும்பத்தில் அண்ணன் மற்றும் தங்கை இருந்தார்கள். இருவருக்கும் சாக்லேட் கொடுப்பார்கள். அண்ணன் தன்னுடையதை பள்ளிக்கு கொண்டு செல்ல ஒரு இடத்தில் வைப்பான்,அதை தங்கை எடுத்து சாப்பிட்டு விடுவார். தொடர்ந்து இது நடந்துகொண்டே இருந்தது. ஒரு நாள் தங்கை அண்ணனிடம் அன்பு என்றால் என்ன என்று கேட்க, அதற்கு அந்த அண்ணன், நீ உன்னுடைய சாக்லெட்டை சாப்பிட்டு விட்டு என்னுடையதையும் சாப்பிடுவாய் என்பதால் தொடர்ந்து அந்த இடத்திலேயே வைப்பேன். அதுதான் அன்பு அன்பு தான் நம்மை ஜெயிக்க வைக்குற ஆயுதம், உறவுகளும், நம்மை விட்டுக் கொடுக்காத நண்பர்களும் இருந்தால் போதும் உலகையே ஜெயிச்சிடலாம். இந்த குட்டி ஸ்டோரியைக் கூறி ரசிகர்களை புல்லரிக்க வைத்துள்ளார் விஜய். மேலும் நம்ம போகிற பாதை நிறைவாக இருக்க வேண்டும் என்றால் நாம் தேர்ந்தெடுக்கும் பாதை சரியாக இருக்க வேண்டும். ஒருவர் உங்களை எதிர்த்தால் நீங்கள் சரியான பாதையில் இருக்கீறீர்கள் என்று அர்த்தம் என்று கூறி தனது உரையை முடித்தார் விஜய்.