விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமாகியவர் நடிகை சித்ரா. இந்த தொடரில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி இருந்தது. மேலும் படங்களில் கதாநாயகியாகவும் சித்ரா நடிக்க தொடங்கினார். ஆரம்பத்தில் விஜே வாக வாழ்க்கையை தொடங்கிய இவரை அனைவரும் தற்போது வரை விஜே சித்ரா என்று தான் அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர் எதிர்பாராதக விதமாக கடந்த 2020ஆம் ஆண்டு பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை செய்து வந்தனர். மேலும் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் தந்தை போலீசில் புகார் அளித்து இருந்தார். இந்த வழக்கில் அவருடன் ஹோட்டலில் இருந்த அவரின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.
இன்று இந்த வழக்கின் இறுதி விசாரணை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஹேம்நாத்க்கு எதிராக முறையாக ஆவணங்கள் சமர்பிக்கப்படாததால் அவரை நிரபராதி என கூறி நீதிபதி ரேவதி உத்தரவிட்டு உள்ளார்.