யுடியூபர் இர்பானை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு வெளிநாடு மற்றும் உள்நாடு என பல இடங்களுக்கும் சென்று உணவு சாப்பிட்டு விமர்சனம் கூறி இருக்கிறார். ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கிய இந்த சேனலை தற்போது பல மில்லியன்கள் பார்வையாளர்களை பெற்று இன்னும் அதற்காக தனது கடின உழைப்பை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது வெள்ளித்திரையில் படங்கள் நடிக்க தொடங்கி உள்ளார் இர்பான்.

மேலும் குக் வித் கோமாளி கடந்த சீசன்களிலும் போட்டியிட்டு இறுதி வரை வந்து இருந்தார். இவருக்கு மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இருந்தும் இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அண்மையில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதனை வீடியோவாக வெளியிட்டு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி அதற்கு மன்னிப்பும் கோரி இருந்தார் இர்பான்.
இந்நிலையில், தற்போது இவர் மருத்துவமனையில் தனது மனைவியை பிரசவத்திற்காக அனுமதிக்கும் பொழுது , அறைக்குள்ளே நடந்ததை வீடியோவாக எடுத்து உள்ளார். மேலும் தொப்புள் கொடியை மருத்துவர்கள் மட்டுமே கவனமாக அறுக்க வேண்டும் என்ற நிலையில் தற்போது இர்பான், அதனை அறுத்து வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்து இருந்தார். இதில் முதல்கட்டமாக மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிலையில் மன்னிப்பு கோரி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் நடந்ததற்கு வருத்தம் தெரிவித்து உள்ளார். அதில் தான் எந்த உள்நோக்கத்துடன் செயல்படவில்லை எனவும், மருத்துவ சட்டங்களை மதிப்பதாக கூறி உள்ளார்.