ஈரானில் பெருகிவரும் பொருளாதார மந்தநிலையால் உடலுறுப்புகளின் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளன.
டிரம்ப் தலைமையிலான அமெரிக்க ஏகாதிபத்திய அரசினால் ஈரானின் எண்ணெய் வளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்சியாக அந்நாட்டின் பொருளாதாரம் வேகமாகக் சீரழிந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக மருத்துவ பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு ஏழ்மை அதிகரித்து வரும் சூழலில், ஈரான் நாட்டு இளைஞர்கள் தங்களது உடலுறுப்புகளை அதிகளவில் விற்பனை செய்து வருவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வறுமையும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள மோசமான வாழ்க்கை தரமும் கள்ள சந்தையை நோக்கி மக்களை தள்ளுகிறது.
இதன் விளைவாக, இரத்தத்தின் வகை, பாலினம் போன்ற விவரங்களோடு தெருக்களில் விளம்பரப்படுத்தி தேவை என்றால் தொடர்புகொள்ளுமாறு பதாகைகளை ஒட்டி விற்பனை செய்ய முற்படுகிறார்கள்.

தங்களது அத்தியாவசிய பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்த்துக்கொள்ள ஆண்களும், பெண்களும் உடலுறுப்புகளை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளனர். குறிப்பாக 22 முதல் 34 வயதிலான மக்கள் கிட்னியை விற்கிறார்கள்.
ஈரானில், கிட்னி 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் அமெரிக்க டாலர் வரை விற்கப்படுகிறது. இது தவிர நுரையீரல் 15 ஆயிரம் டாலர் முதல் 50 ஆயிரம் டாலர் வரையிலும், கரு விழி 20 ஆயிரம் டாலர் வரையிலும், எலும்பு மச்சை 10 ஆயிரம் டாலர் வரையிலும் விற்கப்பட்டு வருகின்றன.
நேரடியாக மட்டும் நடைபெற்று வந்த இந்த விற்பனை, இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற இணையம் மூலமாகவும் விற்பனை அதிகரித்து வருகிறது.