நீரில் மூழ்கக்கூடிய வாகனத்தில் மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் இலக்கு 2021-2022 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றப்பட இருக்கிறது.
‘சமுத்ரயான்’ என்று கூறப்படும் ஆழ்கடல் ஆராய்ச்சி திட்டத்தை இந்தியா தொடங்க இருக்கிறது. இந்த திட்டம் சென்னையில் உள்ள பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது. அரியவகை தாதுக்களுக்கான ஆழ்கடல் சுரங்கத்திற்கான பூமி அறிவியல் அமைச்சகத்தின் பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக சமுத்ரயான் உள்ளது.

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட நீரில் மூழ்கும் வாகனம் கடல்படுக்கையில் 6கி.மீ ஆழம் வரை செல்லும். மேலும் 72 மணி நேரம் வரை ஊர்ந்து செல்லும் தன்மை கொண்டது.
இந்த திட்டம் ஆழமான நீருக்கடியில் ஆய்வுகளை மேற்கொள்ள மூன்று பேர் கொண்ட குழுவை 6000மீ ஆழத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. நீர்ழூழ்கிக்கப்பல்களால் 200மீ ஆழத்திற்கு வரை மட்டுமே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுரங்கவேலை 2022 ஆம் ஆண்டில் தொடங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வை மேற்கொள்வதற்கும் போலிமெட்டாலிக் தொகுதிகளை ஆராய்வதற்கும் சர்வதேச கடல்படுக்கை அதிகாரத்தால் மத்திய இந்திய கடல் படுகையில் 75,000 சதுரகி.மீ பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் நாடுகளிலேயே இந்தியா தான் முதன்முதலாக இத்திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. இத்திட்டம் வெற்றி அடைந்தால் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் இணைந்து நீருக்கடியில் பல ஆய்வுகளை மேற்கொள்ளும்.