உற்பத்தி மந்தம் ஏற்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன்

மத்திய பாஜக அரசின் 100 நாட்கள் சாதனைகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செப்.10) சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது,

சட்டப்பிரிவு 370 நீக்கம்:

ஜனசங்க காலத்தில் இருந்து ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதியிலும் நாங்கள் கூறியபடி சிறப்பு அதிகாரம் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்துள்ளோம். ஒரு சட்டம் இருக்கிறது என்றால் பொதுமக்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும். ஆனால் சட்டப்பிரிவு 370 உபயோகமாக இல்லை.

ஜி.எஸ்.டி:

இதன் மூலம் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கான இடஒதுக்கீடு ஜம்மு- காஷ்மீரில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும், பல மாநிலங்களில் இருந்தும் முதலீடு பெருக ஆரம்பிக்கும். கடன் வாங்குவோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கடன் அளிப்பதற்கான சக்தி நம்மிடம் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப போலவே சிறிய வங்கிகளை இணைக்கும் போது பொருளாதாரம் குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டும்.. இந்த கொள்கை முடிவு, 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைய உதவும். அது போலவே நாடு முழுவதும் ஒரே வரியான ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதன் மூலம் சரக்கு போக்குவரத்து செலவு குறைந்துள்ளது என்றார்.

உற்பத்தி வீழ்ச்சி:

இது குறித்து மேலும் அவர் பேசுகையில், விற்பனை மந்தம் காரணமாக மோட்டார் வாகன உற்பத்தி வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆகவே அதில் உள்ள சிக்கல் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். மோட்டார் வாகன உற்பத்தியில் சரிவிற்கு பல காரணங்கள் உள்ளன. இதனை மீட்பதற்கு அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக முத்தலாக் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அதே போல, மோடியின் 2.o ஆட்சியில் உள்கட்டமைப்பு துறைக்கு 100 லட்சம் கோடி முதலீடும், ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு ஊதியம் கிடைக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 1.95 கோடி வீடுகள் அடுத்த 2 ஆண்டுகளில் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022-க்குள் அனைவருக்கும் குடிநீர், மின்சார வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவ துறை:

ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்க ஆயுஷ்மான் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் குறைந்த ப்ரீமியத்தில் உயரிய சிகிச்சையை ஏழைகள் பெறுகின்றனர். 41 லட்சம் பேர் இதுவரை இந்தத் திட்டத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 16 ஆயிரம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 10 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

விவசாய துறை:

விவசாயிகளுக்கு நிதியுதவி அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம், தவிர ஓய்வூதியமாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது. 6.37 கோடி விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது .

வேலையிழப்பு:

வேலையிழப்பு பிரச்சினையை சரிசெய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அதிகாரிகள் பொருளாதார துறையினருடன் தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்