உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா 102 வது இடத்தைப் பிடித்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் இன்று (புதன்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை குற்றசாட்டியுள்ளார். பிரதமர் அரசியலை விட நாட்டின் குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
2019ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பசி குறியீட்டு வெளியிடப்பட்டது. இதில் இந்தியா 102வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் கடந்த முறை இந்தியா 95வது இடத்தை பிடித்திருந்தது. இது அண்டை நாடான நேபால், பாகிஸ்தான், வங்க தேசம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது மிக பின் தங்கிய நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பிரதமர் மோடியை விமர்சித்துள்ள காங்கிரசின் முத்த தலைவர் கபில் சிபல்,”உலகளாவிய பசி குறியீட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு 95வது இடத்தில் இருந்த இந்தியா, 2019ஆம் ஆண்டு 102வது இடத்தை பிடித்திருக்கிறது. எனவே நம் நாட்டு பிரதமர் அரசியலை விட நாட்டு குழந்தைகள் மீது அதிக அக்கறையை காட்டவேண்டும். 6 முதல் 23 மாதங்கள் வரை உள்ள 93 சதவீத குழந்தைகளுக்கு குறைந்தபட்சமான உணவு கிடைப்பதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மொத்தம் 117 நாடுகளை உள்ளடக்கிய இப்பட்டியலில் பெலாரஸ், உக்ரைன், துருக்கி, கியூபா மற்றும் குவைத் போன்ற நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. அதே போல அண்டை நாடுகளான வங்கதேசம் 88வது இடத்திலும், பாகிஸ்தான் 94வது இடத்திலும், இலங்கை 66வது இடத்திலும், சீனா 25வது இடத்திலும், நேபாளம் 73வது இடத்திலும் உள்ளன.