பாகிஸ்தானில் நடைபெறும் தொடர் போட்டியில் விளையாட இலங்கையின் முன்னணி வீரர்கள் மறுத்துள்ளதால், அதன் தொடர் இரத்தாகியுள்ளது. ஆனால் இதற்கு முக்கிய காரணமே ஐபிஎல் நிர்வாகம் தான் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி இன்று (செப்.20) குற்றம் சாட்டியுள்ளார்.
3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி 20 தொடர் போட்டியில் பாகிஸ்தானோடு விளையாட ஒப்பந்தம் செய்தது இலங்கை கிரிக்கெட் வாரியம். ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் மறுத்துள்ளதாக கூறி தொடரை ரத்து செய்தது இலங்கை வாரியம்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி, இலங்கை வீரர்கள் பாகிஸ்தானிற்கு சென்றால், இந்தியாவின் ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாது என இந்திய ஐபிஎல் நிருவாகம் மிரட்டியுள்ளது. இதன் காரணமாகவே இலங்கை வீரர்கள் பின்வாங்கி விட்டதாக தெரிவித்தார்.

மேலும் கூறிய அவர், பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் விளையாட கோரி நான் இலங்கை வீரர்களை அணுகினேன். அவர்களுக்கு இங்கு விளையாட விருப்பம் இருக்கிறது. ஆனால் ஐபிஎல் தொடர்களில் அவர்கள் ஒப்பந்தங்களை ரத்து செய்துவிடுவதாக மிரட்டி இருக்கிறது.
பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு ஆதரவாகவே இருக்கிறது. ஆகையால் இலங்கை கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானுடனான தொடரில் விளையாட ஒப்பந்த வீரர்களுக்கு அழுத்தம் தர வேண்டும். தற்போதைய நிலையில் இங்கு விளையாட வரும் வீரர்கள் பாகிஸ்தானின் வரலாற்றில் நினைவுகூர படுவார்கள் என்று கூறினார்.
2009-ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது இலங்கை அணி வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சில வீரர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.