Categories: அரசியல்

குரூப் 1 தேர்வு: முறைகேடுகளை மூடிமறைக்க அரசு திட்டம்!

குரூப் 1 தேர்வில் நடந்த முறைகேட்டை ஆளும் கட்சி மூடி மறைக்க முயல்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

குரூப் 1 தேர்வு: முறைகேடுகளை மூடிமறைக்க அரசு திட்டம்! 1
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குரூப் 1 தேர்வு 2016ல் நடந்தது. அதில் தேர்வு எழுதிய ஒருவரின் விடைத்தாள், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியானது. இதனைப் பார்த்த தேர்வாளர் சொப்னா என்பவர், புகார் ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 2017ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் தொடர்புடைய டிஎன்பிஎஸ்சி ஊழியர்களான சிவசங்கரன், பெருமாள், புகழேந்தி ஆகியோர் கைதானார்கள். விடைத்தாளில் முறைகேடு செய்ததாக ராம்குமார் என்பவரும், குமரேசன் என்பவரும் கைது செய்யப்பட்டார்கள். இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரிக்கத் தொடங்கிய போது, மலையளவு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை நான் சொல்லவில்லை.

இந்தவழக்கு தொடர்பாக விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீஸாரே நீதிமன்றத்தில் அறிக்கையாகத் தாக்கல் செய்துள்ளார்கள்” என்று அதுகுறித்த விவரங்களையும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

”மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த விசாரணை அதிகாரி செங்குட்டுவன், நீதிமன்றத்துக்குக் கொடுத்த அறிக்கையில் சொல்லி இருப்பதாவது:

குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற மொத்த தேர்வர்களான 74 பேரில், 62 பேர் ஒரு குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று முறைகேடாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது பற்றி உயர் நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, அது சம்பந்தமான காவல் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தியதன் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்விசாரணையில் மனித நேயம் மற்றும் அப்போலோ பயிற்சி மையத்தின் இயக்குநராகச் செயல்பட்டு வரும் சாம் ராஜேஸ்வரன் என்பவர் தமிழ்நாடு தேர்வாணையத்தில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் பல முறைகேடுகள் செய்திருப்பதாக தெரியவந்தது.

இவரின் அப்போலோ பயிற்சி மையத்தை 18.1.2018 அன்று மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை செய்கிறார்கள். பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினார்கள். அந்த ஆவணங்கள் இவர்கள் குற்றம் இழைத்திருப்பதற்கு ஆதாரமாக உள்ளதாக போலீஸ் அறிக்கை சொல்கிறது. இங்கே நான் குறிப்பிடுவது அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

மு.க.ஸ்டாலின்

இவர்களுக்கு உதவி செய்ததாக காசி ராம்குமார் என்ற டிஎன்பிஎஸ்சி அலுவலரும் கைது செய்யப்படுகிறார். மனிதநேயம், அப்போலோ ஆகிய பெயர்களைக் குறிப்பிட்டு, விசாரணை செல்வதை விரும்பாத தமிழக அரசு மேலிடம், அதுவரை விசாரணை செய்து வந்த போலீஸ் அதிகாரிகள் குழுவைக் கலைத்து விடுகிறது. இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மாற்றப்படுகிறார்.

2017ம் ஆண்டு பதிவான வழக்கு 2018ஆம் ஆண்டு ஜனவரியில் முடக்கப்பட்டது. ஓராண்டு கழித்து 2019ஆம் ஆண்டு ஜூன் 18 அன்று விசாரணை அதிகாரியான உதவி கமிஷனர் சுந்தரவதனன் ஒரு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அவரும் சில உண்மைகளை வெளியில் கொண்டு வருகிறார்.

வெற்றி பெற்ற 74 பேரின் விடைத்தாள்களை ஆராய்ந்து பார்த்ததில் 3 விடைத்தாள்கள், ஒரே ஆளின் கையெழுத்தில் உள்ளது. வெற்றி பெற்ற 74 பேரில் 65 பேர் ஒரே செண்டரில் படித்துள்ளார்கள். எனவே இந்த செண்டரில் இருந்த ஆவணங்கள் அனைத்தையும் கைப்பற்றி விட்டோம் என்று இவரும் அறிக்கை தருகிறார்.

உடனடியாக விசாரணை அதிகாரி சுந்தரவதனன் மாற்றப்படுகிறார். புதிதாக உதவி கமிஷனர் சுப்பிரமணிய ராஜூ என்பவர் நியமிக்கப்படுகிறார். இவர் தான் இறுதி அறிக்கையை முன்வைக்கப் போகிறார் என்று தகவல்கள் வருகின்றன.

மூன்று விசாரணை அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு செய்த தில்லுமுல்லான காரியங்கள் அனைத்தும், ஆளும்கட்சிக்கு சார்பான ஒரு சில நபர்களைக் காப்பாற்றுவதற்குத் தான் என்பது இதன் மூலம் அறிய முடிகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவர், ”குரூப் 1 தேர்வில் நடந்த அனைத்து முறைகேடுகளும் விரைவில் வெளிச்சத்துக்கு வர வேண்டும். 2017ம் ஆண்டு சென்னை மத்தியக்குற்றப்பிரிவு விசாரித்து, சேகரித்த உண்மைகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பிரச்சினையில் தொடர்புடைய மனிதநேயம், அப்போலோ நிறுவனங்கள், விருப்பு வெறுப்பின்றி நியாயமாகவும் முழுமையாகவும் விசாரிக்கப்பட வேண்டும்.

‘டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள் தான்’ என்று பேட்டி தரும் அமைச்சர் ஜெயக்குமார், உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தர முன்வருவாரா ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்