ஆந்திர மாநில முன்னாள் முதல் அமைச்சரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை அம்மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தமையால் ஆந்திர மாநில காவல்துறை இன்று (செப்.11) வீட்டு காவலில் சிறைப்படுத்தியுள்ளனர். இதனால் அங்கு கலவரம் எழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை இழந்தது. ஆந்திராவின் தற்போதைய முதல்வராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் ஜெகன் மோகன் ரெட்டி இருந்து வருகிறார். இவர் ஆட்சிக்கு வந்ததன் முதல் சந்திரபாபு மற்றும் அவரது தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனை தொடர்ந்து ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது கட்சிக்கு எதிராக அரசியல் வன்முறையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய சந்திரபாபு நாயுடு, அரசுக்கு எதிரான பேரணிக்காக அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று பேரணியில் கலந்துகொள்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த சந்திரபாபுவையும், அவரது மகனான நாரா லோகேஷ் மற்றும் பிற முக்கிய தலைவர்களையும் அம்மாநில காவல் துறை வீட்டு காவலில் சிறைப்படுத்தியுள்ளது.
இத்தகவல் வேகமாக பரவியதனை அடுத்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சந்திரபாபு வீட்டின் முன் திரண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்தவும், கலவரம் நடைபெறாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கையாக தெலுங்கு தேச கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பல இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகார மீறலைக் கண்டித்து இன்று முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியின் பேரணி போலவே ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் முந்தைய அரசை கண்டித்து பேரணி நடத்த திட்டமிட்டு இருக்கிறது. மக்கள் அனைவரும் பேரணியின் கலந்துகொண்டு முந்தைய அரசின் மீதான புகார்களை பகிர்ந்த்துக்கொள்ளுமாறு அழைப்புவிடுத்திருந்தது. இருகட்சிகளும் அமராவதியில் இருந்து சுமார் 240கிமீ தூரத்திற்கு பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.