டெல்லி இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உலக நாடுகளிடையே பலத்த அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை சுட்டிக்காட்டி, உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களான ஹார்வர்ட், ஏல், கொலம்பியா, நியூ யார்க், ஸ்டாண்ட்போர்ட், எம்.ஐ.டி போன்ற பல நிறுவனத்தை சார்ந்த முன்னாள் மாணவர்கள் கூட்டறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

அதில், ஜனநாயக அமைப்பை பெற்ற சமூகத்தில் ஒரு காவல்துறையின் நடத்தைகளை வழிநடத்தும் அனைத்து விதிமுறைகளும் மீறப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள மனித உரிமைகள் மீது வன்முறை தாக்குதல் நடைபெற்றுள்ளன. மாணவர்களுக்கு எதிராக மிருகத்தனமான தாக்குதலை ஏவிய காவல்துறை மீது விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளது.
மேலும், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் மாணவ போராட்டக்காரர்களுக்கு எதிராக காவல்துறை மற்றும் துணை இராணுவதினர் சட்டவிரோதமான வன்முறையை பின்பற்றியுள்ளனர் என கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
- காவல் துறையாலோ அல்லது இன்ன பிற சட்டங்களாலோ மாணவர்களுக்கு எந்த ஒரு இடையூறுகளுமின்றி அமைதியான வழியில் அவர்களது உரிமைகளுக்காக போராட்ட அனுமதிக்க வேண்டும்.
- பல்கலைக்கழக வளாகத்திலிருந்து காவல் துறையினர் உடனடியாக வெளியேற வேண்டும்.
- காவல்துறையும், இந்திய நிர்வாக அமைப்பும் அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்துவதற்கான கடமையை செய்யவேண்டும். அதேபோல், அரசியலமைப்பு எதிரான அரசியல் குறுக்கீடுகளையும் தடுக்க வேண்டும்.
- இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, காவல்துறையின் மிருகத்தன்மை உடைய போக்கு குறித்து விசாரணை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில் 19 பல்கலைக்கழகத்தை சார்ந்த 100க்கு அதிகமானோர் கையெப்பம் இட்டுள்ளனர்.