Categories: அரசியல்

சீமானிற்கு எதிர்ப்பு: விடுதலை புலிகள் அறிக்கை!

இராஜீவ் காந்தியை கொலை செய்தது நாங்கள் தான் என சீமான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை புலிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இராஜிவ் காந்தி படுகொலை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது, எங்கள் அமைப்பிற்கும், படுகொலைக்கும் சம்பந்தம் இல்லை எனவும், இந்தியாவின் ஆளும் வர்க்கம் தன் மீது குற்றம் சாட்டுகிறது என விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தெரிவித்து இருந்தார்.

இதனால் சீமானின் பேச்சு தமிழர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விடுதலை புலிகள் அமைப்பின் சட்டத்துறை பிரநிதி லதன் சுந்தரலிங்கம் மற்றும் அரசியல் துறை பிரநிதி குருபரன் சாமி ஆகியோர் கூட்டு அறிக்கையை இன்று (அக்.16) வெளியிட்டுள்ளனர்.

அதில், நாங்கள் போராட்டக்குழுவோ, ஆயுதக்குழுவோ, வன்முறை இயக்கமோ அல்ல. மாறாக, தமிழீழத்தில் நடந்த அரச வன்முறைகளையும், அரசு ஆதரவு ஆயுதக் குழுக்கள் வன்முறைகளையும் கட்டுப்படுத்தும் இயக்கமாகவே இருந்துள்ளோம். “புலிகள் இல்லையென்றால் இவர்கள் பேசித் தீர்த்துக் கொள்வார்கள் என்று அறிவுரை கூறியவர்களெல்லாம் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்” என்று கேட்டு கொண்டுள்ளனர்.

மேலும், பலமுறை தன்னிலை விளக்கம் அளித்தும், ஆதாரங்கள் பலவற்றை எடுத்து கூறிய பின்னரும் மீண்டும் மீண்டும் புலிகள் தான் ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற ஆதாரமில்லாத தவறான கருத்துத் தொடர்ந்து திணிக்கப்பட்டு வருகிறது. தொடர்கின்ற இதுபோன்ற தவறான பிரச்சாரத்தால் எம்மக்கள் கையறுநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஒரு சிலர் ஒருபடி மேலே சென்று முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களின் உயிர் முன்னாள் பாரதப் பிரதமர் திரு.இராஜீவ் காந்தியின் உயிருக்கு ஈடாகாது என்றுரைப்பது எவ்வளவு வேதனை தரும் விடயம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சீமானிற்கு எதிர்ப்பு: விடுதலை புலிகள் அறிக்கை! 1

இந்தியத் தலைமையைச் சீர்குலைக்கும் திட்டமோ, இந்தியாவைத் தாக்கும் திட்டமோ என்றுமே புலிகளிடம் இருந்ததில்லை. இலங்கையைச் சாராத எந்தவொரு நபருக்கோ, தலைவருக்கோ எதிராக நாங்கள் ஒருபோதும் ஆயுதம் ஏதுமில்லை. திட்டம் தீட்டவுமில்லை. குறிப்பாக எந்தவொரு இந்திய தேசியத் தலைவருக்கும் எதிராகச் செயற்பட நாங்கள் எப்போதும் எண்ணியதில்லை.

இந்தக் கொலை தமிழீழ மக்களை அழிக்கச் செய்யப்பட்ட சதித் திட்டமாகத்தான் தோன்றுகிறது.தொடார்ந்து அழிந்து கொண்டிருக்கும் எம் மக்கள் மீது இது போன்ற அபாண்டமான குற்றச்சாட்டுக்களை இனியும் பதிய வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

இராஜீவ் காந்தி படுகொலைக்கும் எமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என முன்பே பலமுறை விடுதலைப் புலிகள் இயக்கம் கூறி இருக்கிறது. இராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்து சிலநாட்களுக்குள் (1991) விடுதலைப் புலிகளின் வெளியுறவு பொறுப்பாளராக இருந்த கிட்டு ‘இப்படுகொலைக்கும் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லை ‘ என
அறிக்கை வெளியிட்டார். இவ்வறிக்கை அப்போது இந்திய நாளேடுகளில் வெளியானது.

அதே போல பி.சி.சி தலைவர் பிரபாகரனிடம் மேற்கொண்ட நேர்காணலில், ராஜீவ் காந்தி படுகொலையில் எமது இயக்கத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ‘Our movement is not in any way involved in the killing of Mr.Rajiv Gandhi‘ எனத் தெளிவாக கூறினார்.

இந்திய அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்ள
உறவைத் தகர்த்தெறியும் உள்நோக்குடன் ஸ்ரீலங்கா அரசு, அந்நிய சக்திகளும் இணைந்து மேற்கொண்ட சூழ்ச்சியின் விளைவே முன்னாள்
இந்தியப் பிரதமர் மாண்புமிகு ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலையென உறுதியாகக் கருதுகிறோம். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்படும் அபாண்டமான ராஜீவ் காந்தி படுகொலை பழி உடனடியாகத் துடைத்தெறியப்பட வேண்டும் என்றும், புலிகள் மீதான களங்கம் நீங்குமானால் உலக நாடுகள் புலிகள் மீது விதித்துள்ள தடைகள் நீங்கும் என்றும், எமது மக்கள் சுதந்திரக் காற்றைச்
சுவாசிக்கும் காலம் கனியும் என்றும் நம்புகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்