பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ வில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் தமிழக வீராங்கனை வென்று தங்க பதக்கத்தை தட்டியுள்ளார்.

இந்த உலகக்கோப்பை போட்டியில் 71 நாடுகள் மற்றும் 541 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் கலந்துக் கொண்டு 251.7 என்ற புள்ளி கணக்கில் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு பாராட்டுகள் குவிகிறது, அதுமட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர். இதுவரை நடந்த உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவை சேர்ந்த அபுக்வி சண்டேலா மற்றும் அஞ்சலி பகவத் ஆகிய இருவர் மட்டும் தங்கம் வென்றுள்ளனர், அவர்களை தொடர்ந்து இப்போது இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இவரே துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற மூன்றாவது இந்தியர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார், இதற்கு முன்பாக இவர் ஜூனியர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் உலகக்கோப்பை போட்டியில் கடந்த ஆண்டு தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கடலூரில் பிறந்த இவர் அகமதாபாத்தில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இருபது வயதாகும் இந்த பெண் கடந்த ஐந்து வருடமாக துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஜூனியர் பிரிவில் தங்கம் வென்ற இவர் தற்போது சீனியர் பிரிவிலும் தங்கம் வென்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக பிரிட்டனைச் சேர்ந்த மெக்கின்டோஷ் சியோனைட் 250.6 புள்ளிகள் எடுத்து இரண்டாமிடம் பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து தைவானைச் சேர்ந்த லின் யிங்-ஷின் 229.9 புள்ளிகள் எடுத்து மூன்றாமிடம் பிடித்தார்.இந்த உலகக்கோப்பையில் வெற்றி பெறுபவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு டோக்யோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.