கொல்கத்தாவில் பிறந்து 1980 களின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா அக்கினேனி. “மைதிலி என்னைக் காதலி” என்ற தனது அறிமுகப் படத்திலேயே சிறப்பாக நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் அடுத்தடுத்தது பல பிளாக்பஸ்டர் படங்களை அளித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழையும் பெற்றவர் அமலா. தமிழ்த் திரையுலகில் ரஜினி, கமல் போன்ற பிரபலமான நடிகர்களுடன் “கொடி பறக்குது, மாப்பிள்ளை, சத்யா” போன்ற படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம்,

மலையாளம் மற்றும் இந்தி மொழித்திரைப்படங்களிலும் நடித்து தெற்கு இந்தியத் திரைப்படத் துறையில் பிரபலமானார். பின்னர் தெலுங்கு திரைப்பட உலகில் கொடிகட்டிப் பறந்த நடிகரான நாகார்ஜுனா அக்கினேனியை 1992ஆம் ஆண்டில் கரம் பிடித்தார் அமலா. இருப்பினும் பல படங்களில் நடித்தார். அமலா அவர்கள் சிறந்த பரதநாட்டிய நடனக் கலைஞர். மேலும் அவர் அன்னபூர்ணா சர்வதேச திரைப்படம் மற்றும் பள்ளியின் இயக்குனராக திகழ்கிறார். திரைப்படத் துறையில் பல வெற்றிகளை குவித்த அமலா அவர்கள் ஒரு சிறந்த சமூக ஆர்வலர் ஆவார்.

விலங்குகள் மேல் உள்ள பாசமும் பரிவும் அவரை விலங்கு உரிமை ஆர்வலராக ஆகத் தூண்டியது. ஆதலால் 2012 இல் இந்திய விலங்கு நல வாரியம் “ஜீவ் தயா புரஷ்கார்” விருதை அமலாவிற்கு அளித்து கவுரவப் படுத்தியது. இவ்வாறு திரைப்பட உலகிற்கும் சமூகத்திற்கும் பல நன்மைகளைச் செய்த அமலா தனது 53 வது வயதிலும் இளமையாக தோற்றம் அளிக்கக் காரணம் அவர் செய்யும் யோகா மற்றும் உடற்பயிற்சியே ஆகும். அவ்வாறு அவர் பல யோகாசனங்களை செய்யும் புகைப்படங்கள் ட்விட்டரிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. மக்களும் ரசிகர்களும் அப்புகைப்படங்களை ஆச்சரியத்துடன் பார்த்து ரசிக்கின்றனர்.
