இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்து, 2012ஆம் ஆண்டு தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா என புதுமுகங்கள் கொண்டு படம் இயக்கி தமிழ் ரசிகர்களின் முதல் படத்திலேயே ஈர்த்தவர் இயக்குனர் ப.ரஞ்சித். படம் நல்ல வெற்றி அடைந்ததை அடுத்து ரஞ்சித்திற்கு அடுத்தடுத்த படம் இயக்கும் வாய்ப்புகள் வர துவங்கின. தான் கூற விரும்பிய கருத்தை முதல் படத்தில் சில இடங்களில் மட்டுமே கூறிய ரஞ்சித், தன்னுடைய 2வது படத்தில் இறங்கி அடித்தார்.

கார்த்தி, கேத்தரின் தெரசா என பலர் நடிப்பில் “மெட்ராஸ்” என்ற ஒரு தரமான படத்தை கொடுத்து மக்கள் மொத்தத்தின் கவனத்தை தான் பக்கம் ஈர்த்தார். ஒரு சிறிய சுவற்றில் நடக்கும் மிக பெரிய அரசியலை மெட்ராஸ் மக்களின் வாழ்வியளோடு நேர்த்தியாக திரைக்கதை அமைத்து, சிறப்பான இயக்கிருந்தார் ரஞ்சித். படம் வெளியாகி தமிழ் படங்களில் வெளியான முக்கியமான அரசியல் படமாக பார்க்கப்பட்டது. மேல் தட்டு அரசியலை மட்டுமே பேசி வந்த சினிமா இந்த படத்தின் மூலம் அரசியலின் மிக முக்கிய நுணுக்கங்களை அறிந்து கொண்டது.

அடுத்து நடிகர் ரஜினி நடிப்பில் மலேஷியா அடிப்படையில் உருவான “கபாலி” படம். மலேஷியா வாழ் தமிழர்களின் வலியை அரசியலில் அவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் என அன்று வரை தமிழ் சினிமா பார்த்திராத கதைக்களத்தில் படம் வெளியானது. ரஜினியின் அரசியலுக்கும் இந்த படத்திற்கும் உள்ள தூரம் படம் தோல்வியடைய செய்தது.

ஆனால் மீண்டும் ரஜினி நம்பிக்கையுடன் இயக்கிய படம் “காலா”. மும்பையிலுள்ள சேரியில் வாழும் தமிழ் மக்களின் வாழக்கையை பேசிய இந்த படமும் ரஜினியின் ஸ்டைல் படங்களுக்கு பொருந்தவில்லை. இருப்பினும் படம் முதலுக்கு மோசமில்லாமல் நல்ல வசூலை எடுத்தது. இதன் பின் தான் இவர் மீது பெரிய விமர்சங்கள் வைக்கப்பட துவங்கின. எப்போதும் ஒரு சாரார் படங்கள் மட்டுமே அவர் எடுப்பதும், தப்பான அரசியல் படங்கள் அவர் கொடுப்பதாகவும் அவர் மேல் பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன.

இதற்கு அனைத்திற்கும் முற்று புள்ளி வைக்கும் படி, தானே தயாரித்து ஆர்யா, பசுபதி நடிப்பில் ‘சார்பேட்ட பரம்பரை” என்ற தரமான படத்தை கொடுத்தார் ரஞ்சித். கொரோனா கட்டுப்பாடுகள் காரணத்தால் ott தளத்தில் வெளியான இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இது போன்ற படங்கள் திரையரங்கில் வெளியாகி இருக்க வேண்டும் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

மெட்ராஸ் படம் முடித்த கையுடன் ரஞ்சித் விக்ரமிடம் ஒரு கதையை கூறியிருந்ததாகவும், விக்ரம் கொஞ்சம் காத்திருங்கள், நிச்சயம் இந்த படத்தை பண்ணலாம் என கூறியதால் அவருக்காக கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் காத்திருந்து இப்பொது அந்த படத்தை துவங்கியுள்ளார் ரஞ்சித். சரித்திர பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தை, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இது வரை ரஞ்சித் சரித்திர பின்னணியில் படம் இயக்கியதில்லை. அதனால் அந்த பின்னணியிலும் எந்த மாதிரியான அரசியலை அவர் பேசவுள்ளார் என ரசிகர்கள் பலரும் காத்துள்ளனர். படம் வருகிற ஜூலை 15ஆம் தேதி முதல் படப்பிடிப்பை துவங்கவுள்ளது. கையிலுள்ள துருவ நட்சத்திரம் படத்தின் மீதி காட்சிகளை விக்ரம் முடித்துக்கொடுத்துவிட்டு இந்த படத்தில் இணைவார் எனவும் கூறப்படுகிறது. உண்மையில் விக்ரம் போன்ற சிறந்த நடிகரும், ரஞ்சித்தை போன்ற மாற்று சிந்தனை கொண்ட ஒரு இயக்குனரும் இணைவதால் இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது. இந்த படத்தில் இதுவரை பார்த்திராத படி விக்ரமை காட்டவும் பா.ரஞ்சித் முயன்று வருகிறாராம்.
