நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தபடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான “தி கிரே மேன்” ஜூலை 15 வெளியாக உள்ளது. அடுத்தபடியாக மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகிறது. தற்போது தமிழில் வாத்தி மற்றும் தெலுங்கில் சார் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. அதற்குள் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய படத்தை ராக்கி, சாணிக்காயிதம் போன்ள படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார்.

இந்த படத்திற்கு கேப்டன் மில்லர் என்று பெயரிடப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் 1930 காலத்தில் இருந்த மதராஸ் மாகாணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இந்த படம் ஹீரோவை மையமாக கொண்டு இருக்கும் என்றும், கதையை எழுத தொடங்கிய போது யாரையும் மனதில் வைத்து எழுதவில்லை ஆனால் பாதி எழுதி முடித்த பிறகு தனுஷ் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று தான் நம்பியதாக அவர் கூறினார்.

கதாநாயகனின் கேரக்டர் வெவ்வேறு காலகட்டங்களை கொண்டதால் அதற்கு தனுஷ் சரியான தேர்வாக இருப்பார் என்று தான் நம்பியதாகவும் இயக்குனர் கூறினார். இந்த படத்தை கேஜிஎஃப் போன்று பான் இந்தியா படமாக தயாரிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. கேப்டன் மில்லர் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த வல்லிபுரம் வசந்தன். 1987ம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதலில் மரணமடைந்தார். முதலாவது தற்கொலை போராளி என புகழப்படுகிறார். படத்தின் இரண்டாவது பாகத்தில் போர் காட்சிகள் இடம் பெறும் என இயக்குனர் கூறியிருந்த நிலையில் இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.