தமிழில் மிகப்பிரம்மாண்டமாக எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம் தான் பொன்னியின் செல்வன். எழுத்தாளர் கல்கியால் ஒரு வார இதழில் வெளியிடப்பட்ட கதை. இது மொத்தம் 5 பாகங்களாக வெளிவந்தது. இதற்கு இணையாக பிரம்மாண்டமான நாவல் கதை இன்றளவும் தமிழில் இல்லை. இந்த கதையை பலரும் படமாக்க முயன்று தோற்றுப் போயினர். எம்.ஜி.ஆர் கூட இந்த முயற்சியில் ஈடுபட்டு பின்னர் கைவிட்டார். தற்போது இந்த படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி வருகிறார். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பல முண்ணனி நடிகர்களை முக்கியமான காதாபாத்திரத்தில் நடிக்க வைத்து மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இந்த படம் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டீசர் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

5 மொழிகளில் வெளியாகவுள்ள படத்தின் தமிழ் டீசரை சூர்யா வெளியிடுகிறார். தினமும் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர் படக்குழு. அது தற்போது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. கதாபாத்திரங்களின் பெயர்களை எழுதும் போது அதில் எழுத்துப் பிழைகள் இருப்பதால் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். ஒரு வரலாற்று கதை, பிரம்மாண்ட நாவலை திரைப்படமாக்கும் போது இது போல பெயர்களில் தவறு செய்யலாமா? என்று பலர் தங்களது ஆதங்களை தெரிவித்து வருகின்றனர். முதலில் வெளியான விக்ரம் போஸ்டரில் “ஆதித்த கரிகாலன்” என்பதற்கு பதிலாக “ஆதித்ய கரிகாலன்” என்று இருந்தது. இது அப்போதே சுட்டிக்காட்டப்பட்டது. இருப்பினும் அந்த தவறு சரிசெய்யப்படவில்லை.

இன்று ராஜராஜசோழன் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் போஸ்டர் ஒன்று வெளியானது. அதில் “அருள்மொழி வர்மன்” என்பதற்கு பதிலாக “அருண்மொழி வர்மன்” என்று இருந்தது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் மணிரத்னம் போன்ற மிகப்பெரிய இயக்குனர்கள், ஒரு வரலாற்று கதையை எடுக்கும் போது இவ்வாறு தவறு செய்யலாமா? தமிழ் தெரிந்தவர்களை வைத்து போஸ்டர் தயாரிக்கவில்லையா? அல்லது பொன்னியின் செல்வனை படிக்காதவர்களை வைத்து இந்த படத்தை இவ்வளவு பொருட்செலவில் எடுத்துள்ளாரா மணிரத்னம் என்றும் நெட்டிசன்கள் எடுத்து வருகின்றனர். போஸ்டர்களிலேயே இவ்வளவு தவறு என்றால் படம் எந்த லட்சணத்தில் இருக்க போகிறதோ என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் சோழர்களின் நெற்றியில் பட்டை இல்லாமல் நாமம் போன்ற திலகம் வைத்து இருப்பதையும் விமர்சித்து வருகின்றனர்.
