
கவுதம் மேனன் இயக்கிய தனுஷ்-மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்திருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பு 2016-ல் தொடங்கி பண பிரச்சினைகளால் இடையூறுகளை சந்தித்து ஒருவழியாக 2018-ல் நிறைவுற்றது. படத்துக்கு தணிக்கை குழு ‘யூஏ’ சான்றிதழும் அளித்தது.
ஆனாலும் தொடர்ந்து பண நெருக்கடி மற்றும் கோர்ட்டு வழக்கு பிரச்சினைகள் ஏற்பட்டதன் காரணமாக பல மாதங்களாக திரைக்கு வராமல் நிலுவையில் இந்த படம் முடங்கியது. பேச்சுவார்த்தைகள் நடத்தி படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சிகள் செய்யபட்டனர்.
ஆனாலும் கடைசி நேரத்தில் தடை ஏற்பட்டு ரிலீஸ் தேதிகள் தள்ளி வைக்கப்பட்டு வந்தன. இது தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து வந்தது. பட நிறுவனத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “செப்டம்பர் 6-ந்தேதி வெளியாக இருந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தை வெளியிட முடியவில்லை. கூடிய விரைவில் வெளியிட மேலும் உழைத்துக்கொண்டிருக்கிறோம்” என்றனர்.
இந்த நிலையில் பலமுறை தாமதமான எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் தடைகளை கடந்து வருகிற 29-ந்தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.