அமீர்கான் படத்தில் இருந்து விஜய்சேதுபதி திடீரென விலகியுள்ள சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விஜய்சேதுபதிக்கு பதிலாக அந்த படத்தில் நடிக்க இருக்கும் நாக சைதன்யா விளக்கம் அளித்துள்ளார். 1994ம் ஆண்டு வெளியான படம்தான் ஃபாரெஸட் கம்ப். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக் தான் லால் சிங் தத்தா. இந்த படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமீர் கான், கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஆரம்பத்தில் விஜய் சேதுபதிதான் நடிக்க இருந்தது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே விஜய்சேதுபதி படத்தில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக தெலுங்கு நட்சத்திரம் நாக சைதன்யா படத்தில் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகியது குறித்து காரணம் தெரியாமல் இருந்து வந்த நிலையில், தற்போது நாக சைதன்யா அதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, விஜய் சேதுபதி பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிஸியான அட்டணவணை இருப்பதால் அவரால் இந்த படத்திற்கு கால்ஷீட் தரமுடியவில்லை என்று கூறியிருக்கிறார். மற்ற படங்களில் கவனம் செலுத்த வேண்டி இருந்த்தாலேயே அவர் இந்த படத்தில் இருந்து விலகியதாகவும், படக்குழுவிற்கும் அவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை விஜய் சேதுபதி லால் சிங் தத்தா படத்தின் தயாரிப்பாளரிடம் எடுத்துக் கூறிய பின்பே விலகி உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹீரோவாக மட்டுமே நடிக்காமல், வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடி சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் தன்னுடைய கடின உழைப்பாலும், முயற்சியாலும் இன்று தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் அறிமுகமான போதிலும், இவருக்கு பேரும் புகழும் கிடைத்த படம் என்றால் அது பீட்சா தான். பின்னர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா, 96 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அனைத்து படங்களும் மிக பெரிய வெற்றி பெற்றது.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாமனிதன். சீனுராமசாமி இயக்கத்தில் நடித்து இருந்தார். அதற்கு முன்பாக விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் நடித்திருப்பார். சமீபத்தில் வெளியாகி மக்களின் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படமான விக்ரம் படத்தில், சந்தானம் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருகிறார்.