
தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.7,500 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது என்று மத்திய அரசு தகவல் தெரிவி்த்துள்ளது. பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. ஊழியர்களுக்கு அதிக ஊதியம் உள்ளிட்டவையே நஷ்டத்திற்கு காரணம் என மத்திய அரசு திட்டவட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதே போன்று இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமீப காலமாக கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக கட்டண உயர்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தொலைத்தொடர்பு கட்டணங்களை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதன் காரணமாக ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் டிசம்பர் 1 ஆம் தேதியிலிருந்து கட்டணங்களை உயர்த்த உள்ளன. அலைக்கற்றை அனுமதிக்கான கட்டணங்களில், சுமார் 92 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஏர்டெல், வோடஃபோன்- ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசுக்கு நிலுவை வைத்துள்ளது என்று மத்திய அரசு அறிக்கை வெளிட்டது. இதனை தொடர்ந்து நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருமானத்தின் அடிப்படையில், 8 சதவீத லைசன்ஸ் கட்டணத்தை தொலைத் தொடர்பு ஆணையமான ட்ராய் நிர்ணயம் செய்திருந்தது.
இந்த 8 சதவீத கட்டணத்தை எதிர்த்து நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை, சமீபத்தில் ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம் நிலுவை தொகையை உடனடியாக செலுத்த உத்தரவிட்டது. இந்த நிலையில், அரசுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை, கடன் சுமை, வருவாய் இழப்பு எல்லாம் சேர்ந்து கட்டண உயர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.