
தமிழ்நாட்டில் கடந்த 28ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து பரவலாக பெய்து வருகிறது. வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, தொடர் மழைக்கு வழிவகுத்தது. கடலூர், ராமநாதபுரம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது.
கன மழையின் காரணமாக ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுப்பு அளிக்கப்பட்டது.தொடர் மழையால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிந்தது. இதனால் ஒருபுறம் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டாலும், கனமழையால் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளை சுற்றியும் வீட்டினுள்ளும் புகுந்து உள்ளது . இதனால் அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று முன்தினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கனமழையால் விடுமுறை விடப்பட்டது. இதன்பின்பு நேற்று மழைப்பொழிவு சற்று குறைந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று காலை சில இடங்களில் மிதமான அளவில் மழை பெய்துள்ளது. சென்னையில் வேப்பேரி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆதம்பாக்கம், பொன்னேரி, எழும்பூர் மற்றும் புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.