
சிம்பு வேறொரு இடத்தில் இருக்க வேண்டியவர் என்று இயக்குநர் கெளதம் மேனன் பேசியுள்ளார்.சிம்பு – கெளதம் மேனன் இருவருமே நெருங்கிய நண்பர்கள். இந்தக் கூட்டணியின் முதல் படமான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணியில் ‘அச்சம் என்பது மடமையடா’ படம் வெளியானது. இந்தப் படத்தின் பாடல்களுக்குக் எதிர்பார்த்த அளவுக்கு, படத்துக்கான வரவேற்பு கிடைக்கவில்லை.
அச்சம் என்பது மடமையடா’ படத்துக்குப் பிறகு இந்தக் கூட்டணி இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது. ஆனால், தனது அடுத்தடுத்த படங்களில் தனது முழு கவனத்தையும் செலுத்தினார் கெளதம் மேனன். தற்போது ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், “உங்களுடைய நெருங்கிய நண்பர் சிம்பு மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறாரே..” என்ற கேள்வி கெளதம் மேனனிடம் எழுப்பினர்.அதற்கு அவர் அளித்த பதிலில், “சிம்பு கேமராவுக்கு முன் வரணும் என்பதுதான் என்னுடைய எண்ணம். அவரிடம் கேட்டால், ‘அவருடைய படத்தை முதலில் ரிலீஸ் பண்ணச் சொல்லுங்கள்’ என்று சொல்வார். அவர் அப்படிச் சொன்னாலும் கவலையில்லை. நான் சொன்னாலும் அவர் கவலைப்படமாட்டார்.
சிம்பு வேறொரு இடத்தில் இருக்க வேண்டியவர். அதற்குள் இன்னும் அவர் வரவில்லை. அவருடன் எப்போது வேண்டுமானாலும் படம் பண்ணத் தயாராக உள்ளேன். நான் மட்டுமல்ல பல இயக்குநர்கள் தயாராக உள்ளனர்” என்று தெரிவித்தார் கெளதம் மேனன்.தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘மாநாடு’ படத்தின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, ஜனவரி 20-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.