
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் பெய்ய தொடங்கி வட கிழக்கு பருவமழை சற்று இடைவெளி விட்டு கடந்த நவம்பர் மாதம் 28 முதல் மீண்டும் தீவிரமடைய தொடங்கியது. நேற்று வரை தமிழகத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய 360 மிமீ மழையை காட்டிலும், கூடுதலாக 11 மிமீ மழை பதிவாகி உள்ளது.
இந்நிலையில், அரபி கடலில் இரண்டு காற்றழுத்தங்கள் உருவாகி அவை மேலும் வலுப்பெற்று தற்போது ஒன்றாக இணைந்து புயலாக மாறி இருக்கிறது. இது மகாராஷ்டிரா கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வெப்ப சலனம் நீடித்து வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகி வருகிறது.
அத்துடன் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்தம் உருவாகியுள்ளது. அதனால் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.