கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்கள் தொடங்கி எங்கு திரும்பினாலும் “அயலி” வெப் சீரிஸ் பற்றிய பேச்சாகத் தான் இருக்கிறது. சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்துடன் வெளியான இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது முழு விமர்சனத்தை பார்க்கலாம். பனையூர் என்கிற கிராமத்தில் அயலி என்கிற குலதெய்வம் இருக்கிறது. இந்த ஊருக்கு தேன் எடுக்க வெளியூரில் இருந்து ஒருவர் வருகிறார். அப்போது பனையூர் கிராமத்தில் பெண் மீது காதல் கொள்கிறார். ஊர் கட்டுப்பாட்டை மீறி இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கின்றனர். இதற்கு அடுத்த நாள் ஊரில் வயல்கள் எங்கும் தீப்பற்றி எரிகிறது. ஆடு மாடுகள் செத்து கிடக்கின்றது. நீர் நிலைகளில் உள்ள மீன்கள் எல்லாம் செத்து மிதக்கின்றது. ஊர் கட்டுப்பாட்டை மீறி வேறு கிராமத்து ஆணுடன் அந்தப் பெண் ஓடியதால் குலதெய்வம் அயலி கோபம் கொண்டு விட்டதாக ஊர் மக்கள் எண்ணுகின்றனர். மேலும் ஊரில் பஞ்சம் ஏற்பட்டதால் குடும்பம் குட்டியுடன் ஊரிலிருந்து கிளம்பி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் உள்ள வீரப்பண்ணை என்கிற கிராமத்தில் மஞ்சம் புகுந்தனர். ஊரிலிருந்து கிளம்பும்போது குல தெய்வத்தை பிரிய மனமில்லாத ஒரு சிறுமி அயலியின் காலடியில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக்கொண்டு புதிதாக வந்த வீரப்பண்ணை கிராமத்தில் வைத்து வழிபாட்டை தொடங்குகின்றார்.

நம் ஊரில் உள்ள ஒரு பெண் செய்த தவறின் காரணமாக அயலிக்கு கோபம் ஏற்பட்டு விட்டதால், இதுபோல நடந்தது என்றும் இனிமேல் நம்மூரில் உள்ள பெண்கள் வயதுக்கு வந்த உடனேயே அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்றும், வயதுக்கு வந்து விட்டால் அவர் பள்ளிக்கூடம் போவதை உடனடியாக நிறுத்தி விட வேண்டும், மேலும் வயதுக்கு வந்த பெண்கள் அயலிக்கு கோவிலுக்கு உள்ளே சென்று சிலையை தொட்டு வழிபடக்கூடாது என்றெல்லாம் தங்களுக்குள்ளாகவே ஒரு புதிய சட்டத்தை வகுத்துக் கொண்டு வீரப்பண்ணை கிராமத்தில் வாழ தொடங்குகின்றனர். இது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. 14 ஆம் நூற்றாண்டு தொடங்கிய இந்த கதை 20ஆம் நூற்றாண்டு வரையில் தொடர்கிறது. கதை நடக்கும் காலகட்டம் 1991 முதல் அன்று காட்டப்படுகிறது. அன்று தொடங்கி இன்று வரை இந்த வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர் வீரப்பண்ணை கிராம மக்கள். இந்த சட்டத்தின்படியே வயதுக்கு வந்த உடனேயே பெண்கள் ஆண்களுக்கு மணமுடித்து கொடுக்கப்படுகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண்கள் கூட பத்தாம் வகுப்பை தாண்டியதே இல்லை.

தற்போது கதையின் நாயகி தமிழ்செல்வி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு இந்த சட்ட திட்டங்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை. தான் மருத்துவராக வேண்டும் என்கிற எண்ணத்தில் தீவிரமாக படித்துக் கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் அவர் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது வயதுக்கு வந்து விடுகிறார். ஆனால் அதை வீட்டில் சொன்னால் எங்கே தன்னை பத்தாம் வகுப்பு படிக்க விடமாட்டார்களோ என்று பயந்து கொண்டு வீட்டில் சொல்லாமலேயே மறைத்து விடுகிறார். பின்னர் ஒரு கட்டத்தில் தன் தாயாரிடம் மட்டும் சொல்லும் அவர், நான் வயதுக்கு வந்ததை ஊரில் உள்ள யாருமே கண்டுபிடிக்க முடியவில்லை. ஏன் உங்களால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே நாம் சொன்னால் தான் பிறருக்கு தெரியும் நாம் அதை சொல்லவே வேண்டாம். நான் பத்தாவது படித்த பின்பு சொல்லலாம் என்று அந்த விஷயத்தை மறைத்து, பத்தாம் வகுப்பையும் படித்து முடித்து விடுகிறார். முதல் முறையாக அந்த கிராமத்திலேயே பத்தாம் வகுப்பு படித்த பெண் என்கிற பெருமையை பெறுகிறார் தமிழ் செல்வி. பள்ளியில் முதலிடம் பிடித்து முதல் மாணவியாகவும் வருகிறார்.

ஊரின் சட்ட திட்டத்தின் படி பெண் பிள்ளைகள் பத்தாவது படிக்க கூடாது என்கிற முதல் தடையை உடைத்து முன்னேறுகிறார் தமிழ்செல்வி. அடுத்ததாக வயதிற்கு வந்த பெண்கள் கோவிலுக்கு உள்ளே சென்று அயலியை தொட்டு வழிபடக்கூடாது என்கிற தடையை உடைக்க பாடுபடுகிறார். ஆனால் ஊரில் இருக்கும் சில வில்லன்கள் தமிழ்ச்செல்விக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்றும், வயதிற்கு வந்த பெண்கள் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று மீண்டும் வயல்களுக்கு தீ வைத்து விடுகின்றனர். முன்பு நடந்தது போல அயலி கோபம் கொண்டு வயல்களை தீப்பிடிக்க வைத்து விட்டதாகவும் புரளியை கிளப்புகின்றனர்.மேலும் இதற்கெல்லாம் காரணம் இந்த பள்ளிக்கூடம் தான் பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டும் என்கிற காரணத்தினால் தான் இவ்வாறு நடக்கிறது என்று வில்லன்கள் பள்ளிக்கூடத்தை அடித்து உடைக்கின்றனர். பின்னர் தமிழ்ச்செல்வி மருத்துவரானாரா? இல்லையா? என்பது குறித்த கதை தான் படத்தின் மீதி கதை. அழகான கதையை கருவாகக் கொண்டு இந்தப் படம் மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கிறது. பலரும் இந்த படத்தை பாராட்ட முக்கிய காரணம் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்களது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

குறிப்பாக தமிழ்ச்செல்வியின் தாயாராக வரும் அனுமோல் என்பவரின் நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது. வசனங்கள் ஒவ்வொன்றும் மிக அருமையாக இருக்கிறது. கடவுள் என்பது நம்மை காப்பாற்ற தானே தவிர, நம்மை தண்டிப்பதற்கு அல்ல, அயலி நம்மை ஒன்றும் செய்ய மாட்டாள், நான் அயலியிடம் எல்லாம் பேசி விட்டேன் என்பது போன்ற வசனங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. மேலும் காலம் காலமாக ஊர் வழக்கம் என்று பேசி வரும் மடமைகளுக்கு எதிராக சரியான சவுக்கடி கொடுத்திருக்கிறது இந்த படம். பெண்கள் வயதுக்கு வந்தால் தீட்டு, மாதவிடாய் காலத்தில் தீட்டு, கோவில்களுக்கு செல்லக்கூடாது, பொருட்களை தொடக்கூடாது என்பது போன்ற பிற்போக்குத்தனமான கருத்துக்களை ஒரே படத்தில் உடைத்து எரிந்து இருக்கிறது அயலி திரைப்படம். மேலும் யார் என்ன சொன்னாலும் அதை பற்றி கவலைப்படாதீர்கள், உங்கள் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள், உங்கள் மனதிற்கு பிடித்ததை செய்யுங்கள் போன்ற வசனங்கள் கைதட்டல்களை பெறுகிறது. எந்த கடவுளும் தீட்டு பார்ப்பதில்லை, எந்த கடவுளும் மக்களை தண்டிப்பதற்காக இல்லை, அனைத்து கடவுள்களுமே மக்களை காப்பாற்ற தான் இருக்கிறது என்கிற கருத்தையும் ஆழமாக முன் வைத்திருக்கிறது இந்த திரைப்படம்.

படத்தின் பாசிடிவ் விஷயங்கள்:
- படத்தின் கதைக் கரு
- தமிழ் கதாபாத்திரத்தில் நடித்த கதாநாயகி அபியின் தெறி நடிப்பு.!
- படத்தில் நடித்த நடிகர்கள் ஒவ்வொருவரும் ஆழமான சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியது.
- மகளின் ஆசையை நிறைவேற்ற ஊர்கட்டுப்பாடுகளை எதிர்த்து துணிந்து நின்ற தமிழின் அம்மா கதாபாத்திரம்.
- கடவுளின் பெயரால் நடத்தப்படும் பிற்போக்குத்தனங்களுக்கு எதிரான சிறந்த முற்போக்கான வசனங்கள்.
- சிறந்த ஒளிப்பதிவு, காட்சிகள் அமைப்பு, 1990 களுக்கு ஏற்றார் போல கிராமங்கள், பேருந்துகள் எடுக்கப்பட்ட காட்சிகள் என அனைத்தும் அருமை.
- சிறார் திருமணங்களுக்கு எதிரான நெற்றியடி வசனங்கள்.
படத்தில் நெகட்டிவ் விஷயங்கள்:
- வலிய திணிக்கப்பட்ட வில்லன் கதாபாத்திரம்.

உண்மையில் அயலி கடவுள் இல்லை முற்போக்கு பேசும் ஒரு பேரழகி இந்த படத்திற்கு தமிழ் க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 4.5/5
Youtube Video Code Embed Credits: Zee5