ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப என்னும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் உள்ளங்கை கொள்ளை கொண்ட ரமணியம்மாள் பாட்டி தற்போது காலமாகி இருக்கும் செய்தி அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவரை அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ராக்ஸ்டார் ரமணி அம்மாள் என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும். அந்த அளவிற்கு குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் உயர்ந்திருந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் சென்னையில் வீட்டு வேலை செய்து வந்தார். பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக கோவில் திருவிழாக்கள் மற்றும் மேடைகளில் பாடி குடும்பத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் 2004 ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படத்தில் இடம்பெற்ற “தந்தட்டி கருப்பாயி” என்ற பாடலில் கோரஸ் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பாடலில் வரும் முதலில் சில வரிகளை ரமணியம்மாள் பாடினார். பின்னர் அடுத்தடுத்து இவருக்கு படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. காத்தவராயன், தெனாவெட்டு, ஹரிதாஸ், போன்ற பல படங்களில் இவர் பாடியிருக்கிறார்.

பின்னர் ரமணி அம்மாளுக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப என்னும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. திறமைக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் 63ஆவது வயதில் அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பாடினார். பழைய பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் என அனைத்தையும் பாடிய ரமணியம்மாளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சில படங்களில் பின்னணி பாடும் வாய்ப்பு கிடைத்தது. சண்டக்கோழி 2, காப்பான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு போன்ற பல படங்களில் இவர் பாடியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் கச்சேரிகள் மேடைகளிலும் இவருக்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது. அடிக்கடி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். சரிகமப நிகழ்ச்சியின் போது நடுவர்கள் இவருக்கு ராக்ஸ்டார் ரமணி அம்மாள் என்று பெயர் வைத்தார்கள். அதுவே பின்னாளில் இவரின் அடையாளமாக மாறிப்போனது. இளம் போட்டியாளர்கள் பலர் இருக்கும் பொழுது அவர்களுடன் போட்டி போட்டு இறுதியில் இரண்டாம் இடத்தை பிடித்து வென்றிருந்தார் ரமணியம்மாள்.

மேலும் யாரடி நீ மோகினி என்கிற ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலிலும் சிறிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்து அசத்தியிருந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சில நாட்களாக அவதிப்பட்டு வந்த ரமணியம்மாள் தற்போது உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 69. இவரது மரணம் இசை ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைதளங்களிலும் அவரது இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். எளிமையான குடும்பத்தில் பிறந்து முறையாக சங்கீதம் கற்காமல் கேள்வி ஞானத்தினாலே பலரின் உள்ளங்களை கொள்ளை கொண்ட ரமணி அம்மாளின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமென்று பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.