விஜயகாந்தின் இறுதிச் சடங்கிற்கு வந்த விஜய் மீது காலணி வீசப்பட்ட நிலையில் தற்போது சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காவல் ஆய்வாளருக்கு புகார் ஒன்றை அனுப்பி இருக்கின்றனர். அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. நடிகர் விஜய் மறைந்த திரு.கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இரவு 10:30 மணி அளவில் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அவர் விஜயகாந்தின் உடலை பார்த்து ஒரு நிமிடம் கண் கலங்கிவிட்டு மீண்டும் தனது காரில் ஏறி செல்வதற்காக சென்றபோது எதிர்பாராத நபர்கள் அவர் மீது காலனியை வீசினர். அவரது தலையில் படும்படியாக செருப்பு வீசப்பட்டது.

இந்த சம்பவம் விஜயகாந்த் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. விஜயகாந்தின் உண்மையான ரசிகர்கள் யாரும் இதுபோல செய்திருக்க மாட்டார்கள் என்று விஜயகாந்தின் ரசிகர்கள் விளக்கம் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் தென் சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவராக இருக்கும் அப்பனு என்பவர் தற்போது சென்னை காவல் ஆய்வாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில், “கடந்த 28ம் தேதி நடிகர் திரு.கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பிற்கு துக்கம் விசாரிப்பதற்காக சுமார் 10:30 மணி அளவில் தளபதி விஜய் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் திருமண மண்டபத்திற்கு வருகை தந்தார். அவர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், காலணியை கழற்றி தளபதியை நோக்கி எறிந்துள்ளார்.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள், அவர்களின் சொந்தங்கள் மற்றும் அவர் மீது பாசத்தை வைத்திருக்கும் ஒட்டுமொத்த மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்து விட்டது. அருவருக்கத்தக்க இந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்ட அந்த நபரை கண்டுபிடித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொள்வதாக அவர் அந்த கடிதத்தை எழுதியிருக்கிறார். விரைவில் அந்த நபரை காவல்துறை கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.