தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏ.ஆர் ரகுமானின் சகோதரி ஏ.ஆர் ரொஹைனாவின் மகன் தான் ஜி.வி பிரகாஷ். சிறு வயது முதலே இசையில் ஆர்வம் கொண்ட இவர் ‘வெயில்’ படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். சைந்தவியும் சிறுவயதிலிருந்து திறமையான பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜி.வி பிரகாசும், சைந்தவியும் நல்ல நண்பர்களாக இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் அது காதலாக மாறியது.

2013ம் ஆண்டு இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். 11 ஆண்டுகளாக இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அதற்கு சாட்சியாக இந்த தம்பதிகளுக்கு அன்வி என்கிற மகள் இருக்கிறார். 2020ம் ஆண்டு இந்த குழந்தை பிறந்த நிலையில், தற்போது குழந்தைக்கு நான்கு வயது ஆகிறது. இந்த நிலையில் ஜி.வி பிரகாஷ் சைந்தவி தம்பதிகள் பிரிய இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் திரை உலகத்தைச் சேர்ந்த காதல் ஜோடிகள் சில காலங்களாக விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்.

சமந்தா – நாக சைதன்யா, தனுஷ் ஐஸ்வர்யாவை தொடர்ந்து தற்போது ஜிவி பிரகாஷ் சைந்தவி தம்பதிகளும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் திருமண நாளுக்கு பதிவு ஒன்றை பகிர்ந்த சைந்தவி, இந்த வருடம் எந்த பதிவையும் வெளியிடவில்லை. மேலும் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விரைவில் விவாகரத்து குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.