தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர் என்றால் அது விஜய் மில்டன் தான். இவர் இயக்கத்திற்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இவர் இயக்கிய கோலிசோடா படம் இன்றுவரை பலருக்கும் விருப்பமான படங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் சீயானை வைத்து இவர் இயக்கி இருந்த பத்து எண்றதுக்குள்ள எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. இந்நிலையில் இவர் விஜய் ஆண்டனியை வைத்து மழை பிடிக்காத மனிதன் படத்தினை இயக்கி உள்ளார்.

இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் உருவாகி இருந்தது. காரணம், இப்படத்தில் கேப்டன் விஜயகாந்தை நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தனர். தற்போது இப்படத்தில் கேப்டன் நடிக்க முடியாமல் போனதால் படக்குழு அதற்கு தகுந்த மாதிரி கதைகளை மாற்றிக்கொண்டனர். இப்படத்தில் இவருடன் சத்தியராஜ், சரத்குமார் ஆகியோர் நடித்து உள்ளனர்.

இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் விஜய் மில்டன் தற்போது இப்படத்தில் 1 நிமிட காட்சிகள் தனக்கே தெரியாமல் வந்துவிட்டதாக கூறி உள்ளார். அந்த காட்சியில் படத்தின் மொத்த கதையையும் வைத்து உள்ளதாக கூறி உள்ளார். யார் இந்த வேலையே செய்தது என்று தனக்கு தெரியவில்லை எனவும், தன்னை காலி செய்வதற்காக இதுபோன்று நடந்து உள்ளதாக அவர் கூறி உள்ளார்.