சாதாரணமாக நாடாளுமன்றத்துக்கு வராதவர் அன்று வந்தார். வந்தவர் தமிழர்களுக்கு துரோகம் செய்தார் என பாமக எம்.பி அன்புமணியை திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
தேசிய குடியுரிமை சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. மக்களவையில் போதிய ஆதரவு பாஜகவிற்கு இருப்பதனால் தங்கு தடையின்றி அவர்கள் நிறைவேற்ற முடிந்தது. ஆனால் மாநிலங்களவையில் நிலைமை வேறு. மாநில கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு தேசிய கட்சிகளுக்கு போதிய பலம் இல்லாமல் இருந்து வந்தது. ஆயினும் எந்த தடங்கலும் இன்றி மாநிலங்களவையிலும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஆந்திராவின் ஜெகன்மோகன், தெலுங்கானாவின் சந்திரசேகர், ஒடிசாவின் நவீன் பட்நாயக், பீகாரின் நிதிஷ்குமார், தமிழகத்தின் அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இச்சட்டத்தை ஆதரிப்பதாக வாக்களித்தனர். மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட அன்றே குடியரசுத்தலைவர் கையப்பமிட்டதால் இச்சட்டம் அமலுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் வீதியில் இறங்கிவிட்டனர். அதைப் போல தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுக அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான திமுக தலைமையிலான கூட்டத்தில் திமுகவின் முக்கியமான எம்.பிக்கள் கலந்துகொண்டு பேசினர். அப்போது பேசிய திமுக எம்.பி கனிமொழி, “அதிமுக தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. மிக முக்கியமான ஈழ தமிழர்களுக்கு கடுமையான துரோகம் இழைத்துவிட்டது. அவர்களின் ஓட்டுரிமை தொடங்கி அவர்களின் வாழும் உரிமை அதிமுக பறிக்க பார்க்கிறது” என குற்றம்சாட்டினார்.
மேலும் பேசுகையில், அதேபோல, பாமகவின் ஒரு எம்பி என அன்புமணி ராமதாஸ் அவைக்கு வருவதே கிடையாது. தமிழகத்தின் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அவை வரமாட்டார். எப்போதும் தலைமறைவாகவே இருப்பார். அப்படி தலைமறைவாக இருந்தவர் இச்சட்டத்தை ஏற்றும் போது மட்டும் அவைக்கு வந்தார். மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தார். வேண்டும் என்றே அன்புமணி தமிழக மக்களுக்கு துரோகம் செய்தார்” என பாமகவின் ஆதரவு நிலைப்பாடு குறித்து விமர்சனம் செய்தார்.