கோடைக்காலத்தில் மின்வெட்டை சமாளிக்க தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து 6,000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் தங்கமணி வலியுறுத்தி உள்ளார்.

அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக அமைச்சர் தங்கமணி, மத்திய மின்சார மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தங்கமணி கூறுகையில், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உற்பத்தி செய்து வழங்கும் மின்சாரத்தின் சராசரி மின் தொடரமைப்பு மற்றும் பணிகள் தற்போது 14 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இது குறித்து மேலும் பேசுகையில், தற்போது தமிழ்நாட்டில் வழங்கப்படும் மின்சாரத்திற்கான தொகை 98% வசூல் செய்யப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை மூன்று மாதத்தில் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் மின்சாரம் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும். தற்போது குறைவான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் பற்றாக்குறையை சமாளிக்க தனியார் மற்றும் வெளி சந்தையில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. வருகிற கோடைகாலத்தை சமாளிக்க மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்படவேண்டிய மின்சாரத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்