
விஜய்யின் பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘மாஸ்டர்’ என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக வருகிறார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் அர்ஜுன்தாஸ் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியிலும், கர்நாடகாவில் உள்ள சிறைச்சாலையிலும் நடந்தது.
அதை தொடர்ந்து சென்னையில் பூந்தமல்லியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. விஜய் படத்தில் வரும் சில முக்கிய தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டிருந்தது. அது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இந்த படம் ‘சைலன்ஸ்டு’ என்ற கொரியன் படத்தின் கதையை கருவாக வைத்து தயாராவதாக இணையதளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
மாஸ்டர் மற்றும் சைலன்ஸ்டு படங்களை வைத்து பல மீம் வெளியிட்டனர். இந்த நிலையில் இரண்டு கதைகளும் வெவ்வேறு என்று படக்குழு அறிவித்திருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு வினியோகஸ்தர்கள் இடையே பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே படப்பிடிப்பு முடிவதற்குள் மாஸ்டர் படத்தின் வியாபாரம் நடந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாஸ்டர் படத்தை தற்போது தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாட்டு வினியோக உரிமையாளர்கள் தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமையாளர்கள் இவர்களை சேர்த்து ரூ.200 கோடிக்கு மாஸ்டர் படம் வியாபாரம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது விஜய் படத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையாக உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.