கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.220 கோடி அளவிலான நகர்ப்புற கூட்டுறவு வங்கி நிதிகளில் முறைகேடு நடந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு நிதி நிறுவனங்களில் பலவிதமான நிதி மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்தியா தொடர்ந்து நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
இந்நிலையில், நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளில் கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் ரூ.220 கோடி மதிப்பிலான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக 1,000 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2018-19 நிதியாண்டில் மட்டும் ரூ.127.7 கோடி மதிப்பிலான 181 மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
மேலும், 2017-18 நிதிஆண்டில் ரூ.46.9 கோடி மதிப்புக்கு 99 மோசடி வழக்குகளும், 2016-17 நிதி ஆண்டில் ரூ.9.3 கோடி மதிப்பிலான மோசடிக்கு 27 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், 2015-16 நிதி ஆண்டில் நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளில் நடைபெற்ற ரூ.17.3 கோடி மோசடிக்காக 187 வழக்குகளும், 2014-15 நிதி ஆண்டில் ரூ.19.8 கோடி மோசடி செய்ததற்காக 478 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.