இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் விற்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தொடர் வருவாய் இழப்பு காரணமாக சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான கடனில் ஏர் இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இழப்புகளை சரி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் அவை தோல்வியிலேயே முடிந்தன.
இதனால் தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள மத்திய அரசு, “பொதுத் துறை நிறுவனங்களில் மத்திய அரசுக்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏா் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்திருக்கிறது.
குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும் ஏா் இந்தியாவின் துணை நிறுவனமான ஏா் இந்தியா எக்ஸ்பிரஸின் 100 சதவீத பங்குகளையும், கூட்டு நிறுவனமான ஏஐஎஸ்ஏடிஎஸ் நிறுவனத்தில் 50 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு தீா்மானித்துள்ளது.
பங்கு விற்பனைக்கான முதல்கட்ட ஏல ஆவணங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பங்குகளை வாங்க விரும்புவோா் மாா்ச் 17ஆம் தேதி வரை தங்களது விருப்பங்களை தெரிவிக்க காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.