டப்பிங் பேசிக்கொண்டிருந்த போதே மாரடைப்பால் காலமானார் நடிகர் மாரிமுத்து (57).

வெளியிட்டது

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து இன்று மாரடைப்பால் காலமாகி இருக்கிறார். இந்த செய்தி சின்னத்திரை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் பலரின் மனம் கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கிலும் முக்கிய இடத்தை பிடித்து வரும் இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருபவர் மாரிமுத்து. அவர் சிறந்த வில்லனாக, ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவராக தனது மனைவியையும், தம்பி மனைவிகளையும் நடத்தும் விதம் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்த போதிலும், இவரது நடிப்புக்காக பலரும் இந்த சீரியலை பார்த்து வந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டப்பிங் பேசிக்கொண்டிருந்த போதே மாரடைப்பால் காலமானார் நடிகர் மாரிமுத்து (57). 1
1967ஆம் ஆண்டு தேனியில் பிறந்த இவர் படங்கள் இயக்க வேண்டும் என்கிற ஆர்வத்தின் காரணமாக வீட்டை விட்டு ஓடி சென்னைக்கு வந்தார். ஆரம்பத்தில் ஹோட்டல்களில் வேலை பார்த்து வந்த அவருக்கு வைரமுத்து உடன் ஏற்பட்ட பழக்கத்தால் திரைத்துறைக்குள் வர ஆரம்பித்தார். அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் போன்ற படங்களில் உதவி இயக்குனராக அறிமுகமாகி பின்னர் இயக்குனராக அவதாரமெடுத்தார். 2008ம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் என்கிற படத்தையும் 2014ம் ஆண்டு வெளியான புலிவால் என்கிற இரண்டு படங்களையும் இயக்கி இருக்கிறார். பின்னர் இவருக்கு இயக்கம் பெரிய அளவில் கை கொடுக்காத காரணத்தினால் நடிப்பு பக்கம் கவனத்தை திருப்பினார்.

யுத்தம் செய், நிமிர்ந்து நில், ஆரோகணம், கொம்பன், மருது போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விக்ரம் படத்தில் கூட போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். ஆனால் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நாடகம் என்று சொன்னால் அது எதிர்நீச்சல் தான். எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து பல மனங்களில் நீங்காத இடம் பிடித்திருந்தார். இந்த நிலையில் அவர் இன்று காலை டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு இந்த செய்தி பேரிடியாக அமைந்துள்ளது.

Youtube Video Embed Code Credits: Thanthi TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்