பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி இன்றுடன் 75 நாட்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது மிட் வீக் எலிமினேஷனில் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இன்று நாமினேட் ஆன போட்டியாளர்களில ஒருவரை வெளியே தள்ளி பிக் பாஸ் அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர். 75 நாட்களை கடந்துவிட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் மீதம் விளையாடி வருகின்றனர். இன்னும் 25 நாட்களே மீதம் இருக்கும் நிலையில் போட்டியாளர்களின் எண்ணிக்கையை அதிரடியாக குறைக்கும் பணிகளில் பிக் பாஸ் ஈடுபட்டுள்ளது. வார வாரம் நடக்கும் வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு வார இறுதியில் கமலஹாசன் வரும் எபிசோடில் எலிமினேஷன் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால் கடந்த வாரம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக மழை அதிகரித்து காணப்பட்டதால், மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வந்தனர். இதனால் வாக்கு எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து கடந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று பிக் பாஸ் குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் இந்த வாரம் கண்டிப்பாக இரண்டு அல்லது மூன்று எலிமினேஷன் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாலை வெளியான ப்ரோமோவில் வீட்டிலிருந்து நாமினேட் ஆன நபர்களை கார்டன் ஏரியாவுக்கு பிக் பாஸ் வரச் சொல்கிறார். அவர்களின் புகைப்படங்களை ஒன்றாக இணைக்கும்படி டாஸ்க் ஒன்றை கூறுகிறார்.
யாருடைய புகைப்படம் ஒன்றாக இணையவில்லையோ அவர்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் பிக் பாஸ் அறிவிக்கிறார். பலரின் புகைப்படங்கள் ஒன்றாக இணையாக நிலையில் பலரும் முழித்துக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் அந்த ப்ரோமோ நிறைவடைந்தது. இந்த நிலையில் வீட்டிலிருந்து அனன்யா ராவ் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் அர்ச்சனா, தினேஷ், கூல் சுரேஷ், விஷ்ணு, அனன்யா ராவ், நிக்சன் ஆகிய ஆறு பேர் இடம் பெற்றிருந்தனர். ஏற்கனவே எலிமினேட் ஆகி மீண்டும் வைல்டு கார்டு மூலமாக உள்ளே வந்த போட்டியாளரான அனன்யா தற்போது மீண்டும் எலிமினேட் செய்யப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இரண்டாவது முறை வாய்ப்பளிக்கப்பட்டும் சரியாக தனது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாத அனன்யா வீட்டிற்குள் வந்த நாள் முதலே அமைதியாகவே இருந்து வருகிறார். வேறு மொழியை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு மொழி பிரச்சனையும் இருந்து வருகிறது. எந்த சண்டையிலும் பங்கேற்காமல் நியாயத்திற்கும் குரல் கொடுக்காமல் சைலன்ட் மோடிலேயே இருந்ததால் மக்களிடம் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வாரம் மிட் வீக் எலிமினேஷன் மூலமாக அவரை எலிமினேட் செய்து பிக் பாஸ் வெளியில் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.