சினிமாவில் தனித்துவன்மையுடன் பிரபலமடைந்த பிரபலங்கள் பலர் உள்ளனர். ரசிகர்களுக்கு இன்றளவும் மிகவும் பிடித்த நடிகர்களில் நிச்சயம் ரகுவரன் இடம்பிடிப்பார். மெலிதான உயரமான தோற்றம் என்பதை எல்லாம் காட்டிலும் ரகுவரன் என்றால் மக்களுக்கு முதலில் ஞாபகம் வருவது அவரது அழுத்தமான குரலே. அதே போல தமிழ் ரசிகர்களுக்கு கே.ஜி.எஃப் 2 படத்தில் இருந்த ஒரே குறை முதல் பாகத்தில் இருந்த நடிகர் நிழல்கள் ரவியின் குரல். மிக பெரிய உந்துகோலாக அந்த படத்திற்கு தமிழில் அவரது குரல் உதவியது. அதே போல இப்பொது தமிழக மக்களை தன்னுடைய அழுத்தமான குரலால் வசீகரித்துள்ளவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.

சினிமாவின் மீது கொண்ட காதலால் 2012ஆம் ஆண்டே “பெருமான்” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் அவரை மக்கள் முதன் முதலில் கவனித்தது, இயக்குனர் லோகேஷின் “கைதி” படத்திலேயே. 2019 ஆம் ஆண்டு கார்த்தி, நரேன் நடிப்பில் வெளியான இந்த படத்தின் மூலம் ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றார். வில்லன் கதாபாத்திரத்திற்கு அவருடைய கனமான குரல் மிகவும் உதவியது.

அதன் பின் விஜயுடன் மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். அந்த படத்திற்கு மிக பெரிய அட்ட்ரக்ஷனாக அர்ஜுன் தாஸ் மாறியிருந்தார். கைதி படத்திற்கு முன்னரே தெலுங்கு படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்துள்ள இவர் இப்பொது ஹிந்தியில் அறிமுகமாக உள்ளார். தமிழில் ஏற்கனவே “கும்கி 2”, வசந்த பாலனின் “அநீதி” போன்ற படங்களிலும், அடுத்து மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகவுள்ள “கைதி 2” மற்றும் “விக்ரம் 3” இவர் நடிக்கவுள்ளார்.

86 புதுமுகங்களைக் கொண்டு 2017-ம் ஆண்டு மலையாளத்தில் உருவான படம் ‘அங்கமாலி டைரீஸ்’. படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது. செம்பன் வினோத் கதை எழுத, லிஜோ ஜோஸ் படத்தை இயக்கியிருந்தார். லிஜோ ஜோஸ் அண்மையில் வெளியாகி ஆஸ்கார் நாமினேஷனுக்கு அனுப்பப்பட்ட “ஜல்லிக்கட்டு” படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் தான் அர்ஜுன்தாஸ் ஹிந்தியில் நாயகனாக நடிக்கவுள்ளார். தமிழில் வெளியாகி விமர்சகர்களிடம் நல்ல விமர்சங்களை பெற்ற “கே.டி. என்கிற கருப்புத்துரை” படத்தை இயக்கிய மதுமிதா சுந்தர ராமன் இந்த ரீ-மேக்கை இயக்கவுள்ளார். இந்த செய்தி இன்னும் அதிகாரப்பூர்வாமாக வெளியாகவில்லை என்றாலும் இதற்கான முதற்க்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.
